பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியா வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது போல ‘90 எம்எல்' திரைப்படமும் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் அனிதா உதீப்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடிவந்தாலும் சரியான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்துவருகிறார் ஓவியா. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்னா 3 படத்திலும், சற்குணம் இயக்கும் ‘கே-2’ (களவாணி) படத்தில் விமலுக்கு ஜோடியாகவும் நடித்துவருகிறார். இதனையடுத்து,கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகிவரும் 90 எம்எல் படத்தில் நடித்துவருகிறார். குளிர் 100 டிகிரி படத்தை இயக்கிய அனிதா உதீப் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படம் குறித்து சமீபத்தில் ஃபர்ஸ்ட்போஸ்ட் இணையதளத்திற்கு இயக்குநர் அனிதா அளித்துள்ள பேட்டியில், "90 எம்எல் திரைப்படம் ஐந்து பெண்களை மையமாக வைத்து உருவாகிவருகிறது. அந்தப் பெண்களையும் அவர்களின் வாழ்க்கையில் அவர்களுடைய விருப்பங்கள் என்னவாக இருக்கின்றன என்பதையும் இந்தப் படம் பேசும். பெண்களை மையமாக வைத்து வெளிவந்துள்ள பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன. இன்று சமகாலப் பெண்களின் தேவை மற்றும் அவர்களோடு பேசுவதற்கு அற்புதமான நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்கிற வகையில் இந்தப் படம் நிச்சயம் ஒரு நவநாகரிகப் படமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஓவியா நடிப்பது பற்றிக் கூறியுள்ள அனிதா, “இந்தக் கதையின் ஐந்து பெண்களில் ஓவியாவும் ஒருவர். அவர் ஒரு தைரியமான பெண். அதனால் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானவர் என்று நினைத்தேன். நாங்கள் ஓவியாவை அணுகி கதையைச் சொன்னோம். உடனே அவர் எனக்கு கதை பிடித்திருக்கிறது; சுவாரஸ்யமானதாக இருக்கிறது; பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு இது ஒரு ஒரு புதிய எடுத்துக்காட்டு என்று சொன்னார். ஏனெனில் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் சமூகத்தில் சமாளிக்கும் பிரச்சினைகளை இப்படம் சொல்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியா வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது போல இந்தப் படமும் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும். முடிந்தவரை ஜூன் மாதம் படத்தை வெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.