ஆண் குழந்தை இல்லாததால் கணவர் செய்த காரியம்... வெட்டிக் கொலை செய்த மனைவி

ஆண் குழந்தை இல்லாததால் 2வது திருமணத்துக்கு முயன்ற கணவரை மனைவி வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சிவாஜிகணேசன், வியாபாரி. இவர், வீட்டுக்கு அருகில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மாதவிராணி. சாத்விகா, பூமிகா என்ற இரு மகள்கள் உள்ளனர்.ஆண் குழந்தை இல்லாததால், சிவாஜிகணேசன் மற்றொரு பெண்ணை 2வது திருமணம் செய்யப்போவதாக கூறி வந்தார். இதனால் அவர் தனது மனைவி மாதவிராணியை அடித்து, உதைத்துக் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மாதவிராணி வீட்டில் காய்கறிகளை வெட்டும் கத்தியை எடுத்து சிவாஜிகணேசனை வெட்டிக்கொலை செய்தார். தான் கணவரை கொலை செய்த விபரத்தை, செல்போன் மூலமாக ரால்லபூடுகூருவில் உள்ள தன்னுடைய உறவினர்களுக்கு தெரிவித்தார்.

பின்னர் மாதவிராணி ரால்லபூடுகூரு பொலிசில் சரணடைந்தார். அவர், கணவரை கொலை செய்த தகவலை பொலிசாரிடம் தெரிவித்ததையடுத்து மாதவிராணியை கைது செய்துள்ளனர்.


ஆண் குழந்தை இல்லாததால் என்னுடைய கணவர் சிவாஜிகணேசன் தினமும் என்னை அடித்து உதைத்து, துன்புறுத்தி வந்தார். அதுமட்டுமல்ல என்னுடைய நடத்தையின் மீதும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ஆண் குழந்தை இல்லை, உனக்கு வேறு ஒருவனுடன் தொடர்பு இருக்கிறது அதனால் நான் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளலாம் என நினைத்துள்ளேன், என சொல்ல அப்போது ஏற்பட்ட தகராறில் காய்கறிகள் வெட்டும் கத்தியால் கணவரை துண்டுத் துண்டாக வெட்டிக் கொலை செய்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சிவாஜிகணேசனின் உறவினர்கள், பொலிசில் பல்வேறு சந்தேகங்களைத் தெரிவித்துள்ளனர். மாதவிராணி கணவருக்கு தெரியாமல் பல முறை பங்காருபாளையம் பகுதிக்குச் சென்று வந்துள்ளார். அவர், யாரோ சிலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார் எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரால்லபூடுகூரு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவாஜிகணேசனின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, கத்தியால் வெட்டி கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Previous Post Next Post