கொலைக் களத்தின் சாட்சியாக நிற்கிறார் இசைப் பிரியா!

அறுபது ஆண்டு கால இன விடுதலைப் போராட்டமானது முற்பது ஆண்டுகள் அகிம்சையிலும், முற்பது ஆண்டுகள் ஆயுதப் போராட்டமாகவும் வடிவம் பெற்றது.அதை ஒடுக்க, பல்வேறு நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு தொடுத்த பெரும் போர் முள்ளிவாய்க்காலில் இரத்த ஆறாக மாறி ஓய்வு பெற்றது.

இப் போரில் 40,000 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இந்தப் போரின் வடுக்கல் இன்னமும் ஆறவில்லை. போரில் நிகழ்ந்த மனிதவுரிமை மீறல்களுக்கு இன்னமும் தீர்வு கிட்டவில்லை.

கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் என்று மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னுமொரு புறத்தில், கொல்லப்பட்ட கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதியை அரசு பெற்றுக் கொடுக்கவில்லை.

இலங்கையில் ஊடக சுதந்திரம் இன்றளவும் பெரும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. போர் இல்லை. குண்டு வெடிப்பில்லை. ஆனாலும் அடக்குமுறைகள் தொடர்கின்றன என்னும் குற்றச்சாட்டுக்கள் குறையவில்லை.

ஈழத்தின் முக்கியமான ஊடகவியலாளர்கள் அதிகளவில் கொல்லப்பட்டவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள் என்று ஒரு கணிப்பீடு சொல்கிறது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 17 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், அதில் 3 சிங்கள ஊடகவியலாளர்கள் தவிர, ஏனைய 14 பேரும் தமிழ் ஊடகவியலாளர்கள் என்கிற தகவல் அதிர்ச்சிக்குரியது தான்.

தராக்கி சிவராமன் உட்பட மிக முக்கியமான நடுநிலை பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்னும் தகவல் ஈழத் தமிழர்களுக்கு ஈடு கொடுக்க முடியாத பேரிழப்பு.

அதே போன்று தான், விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் படுகொலையும் நிகழ்ந்திருக்கிறது.

இன விடுதலைப் போராட்டத்தை சிறுகச்சிறுக கட்டமைத்து, உலகம் வியந்து பார்க்கும் அளவிற்கு மாற்றிய விடுதலைப் புலிகள், தங்கள் போராட்டத்தையும், ஈழத் தமிழனத்தின் உரிமைகளையும், உலகறியச் செய்வதற்கு ஊடகங்களை அதி நுட்பமாகப் பயன்படுத்தினார்கள்.

விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஊடக வலையமைப்பினை ஏற்படுத்தி ஊடக அறத்தோடு தகவல்களையும், செய்திகளையும் வழங்கினார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

புலிகளின் குரல், தமிழீழ தேசிய தொலைக்காட்சி, நிதர்சனப் பிரிவு, மற்றும் இணையத்தளங்கள் போன்றனவற்றை அதிக தொழில் நுட்பத்தோடு பயன்படுத்தினார்கள்.

யாருக்கு, எதில் அதிக ஈடுபாடு இருக்கிறதோ அவர்கள் தங்கள் துறையை தேர்வு செய்து கொள்ள முடியும் என்பதில் புலிகள் தெளிவாக செயற்பட்டனர். அனைவரினதும் கைகளிலும் சுடுகலன்களைக் கொடுத்து களத்திற்கு அனுப்பவில்லை.

சுடுகலன்களுக்குப் பதிலாக பேனாக்களையும், கெமராக்களையும் கையில் கொடுத்து ஊடக களத்திலும் அவர்களைப் பயணிக்கச் செய்தார்கள்.

அப்படி களமிறங்கியவர் தான் இசைப்பிரியா. யாழ்ப்பாணம் மாவட்டம், நெடுந்தீவில் 1981-ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி பிறந்தவர் (சோபனா) இசைப்பிரியா.

1998-ம் ஆண்டு புலிகளின் ஊடகப் பிரிவில் இணைந்து செயலாற்றினார். அங்கு சோபனா எனும் பெயர் இசையருவி என்று மாற்றப்படுகிறது.

நிகழ்ச்சிகளில் இடம்பெறும்போது இசைப்பிரியா என்று குறிப்பிடப்பட்டது. இயக்கத்தின் செய்திகளை, கருத்துகளை, நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் பணியைச் சிறப்பாகச் செய்துவந்தார்.

தமிழீழத் தொலைக்காட்சியில் போராட்டத்தில் மாண்டுபோன மாவீரர்களைப் பற்றிய ”துயிலறைக்காவியம்’ நிகழ்ச்சி இசைப்பிரியாவின் குரலில்தான் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி, இன்றும் பலரின் நினைவுகளை விட்டு அகலாத ஒன்று.

செய்திகள் வாசிப்பது என்று மட்டுமல்லாமல், பல்வேறு குறும்படங்களில் நடிப்பதும் அதன் பணிகளில் பங்கேற்று இருக்கிறார் அவர். ஈழ விடுதலையில் இசைப் பிரியாவின் ஊடகப் பயணம் குறிப்பிடத்தக்களவிற்கு இருந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்பவராக இசைப்பிரியா பணியாற்றினார். அரசியல் சார்ந்த முன்னெடுப்புகளில் காட்டிய கவனத்தை, கலை பண்பாட்டில் செலுத்த வில்லை எனும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

ஆனால் இசைப்பிரியா போன்ற கலை மற்றும் ஊடகச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களில் அளப்பெரிய சேவையானது தனித்த அடையாளமாக மாறியிருந்தது.

ஒரு தேசத்தின் அடையாளமாக இன அழிப்பின், சான்றாக ஒரு ஊடகப் போராளியாக இன்றும் சர்வதேசத்தின் முன்பாக நீதி கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

மக்களை கொன்றொழித்து, பெண்களை வன்முறைக்குள்ளாக்கிய அட்டூழியங்கள் நடந்தேறியது. அதில் பெரும் சாட்சிப் பொருளாக காணொளி காட்சியாக மாறி இன்றும் சான்றாக நிற்கிறார் இசைப் பிரியா.

கொடூரமான முறையில் சித்திர வதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் அந்த வடுக்கள் ஈழத் தமிழனத்தின் நெஞ்சத்தில் பதிந்து கிடக்கின்றன. நீதிக்காக காத்திருக்கிறாள் இசைப் பிரியா?

கருத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், மனிதவுரிமைகள் என்று பேசும் சர்வதேசங்களின் கூட்டு முயற்சியால் அன்றி இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வினைப் பெற முடியாது.
Previous Post Next Post