ராமநாதபுரம் அருகே உள்ள சக்திபுரத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் (வயது 50), போஸ் (வயது34). இருவரும் உறவினர்கள்.
கிருஷ்ணன் அந்தப் பகுதியில் உள்ள பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன் தினம், பார் முன்பு, கிருஷ்ணனுக்கும், போசுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் போதையில் இருந்துள்ளனர்.
அப்போது, போஸ், தன்னிடம் வைத்திருந்த கத்தியால், கிருஷ்ணனை, சராமரியாகக் குத்தி உள்ளார். இதனால், படுகாயம் அடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். போசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், போஸைப் போலீசார் கைது செய்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
அதே அரசு மருத்துவமனையில் தான், கிருஷ்ணனின் உடல், பிரேத பரிசோதனைக்காக வைக்கப் பட்டிருந்தது. கிருஷ்ணனின் உடலைக் காண வந்த அவரது உறவினர்கள், அவரது சாவிற்கு காரணமான, போஸ், அந்த ஆஸ்பத்திரியில் இருப்பது தெரிந்து, நுாற்றுக்கும் மேற் பட்டோர், போஸ் சிகிச்சை பெற்று வந்த வார்டுக்குள் புகுந்து, அவரைக் கொல்ல முயற்சி செய்தனர்.
இதனைக் கண்டு, அதிர்ந்த போலீசார், சுதாரித்துக் கொண்டு, அவர்களை சமாதானப் படுத்தி, அங்கிருந்து அவர்களை அப்புறப் படுத்தினர். போசுக்கு, காவலை அதிகப் படுத்தினர்.
இதனால், ஆத்திரம் அடைந்த கிருஷ்ணனின் உறவினர்கள், போஸ் அனுமதிக்கப் பட்டிருந்த வார்டினை நோக்கி, கற்களால் தாக்கினர். பின் போலீசார் வந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.