`எனக்கு 40 வயது… 50 ஆயிரம் சம்பளம்..!’ – பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை!

`என் வாழ்க்கை திசைமாறியதற்கு தெருவில் கிடந்த செல்போன்தான் காரணம்’ என்று பல பெண்களை திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய 59 வயது `கல்யாண மாப்பிள்ளை’ போலீஸாரிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்

சென்னை தாம்பரம் போலீஸ்  நிலையத்தில் கண்ணீர்மல்க ஓசூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதில், `இரண்டாவது  திருமணம் செய்வதாகக் கூறி தன்னிடம் இருந்த நகை, பணத்தை சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஏமாற்றிவிட்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.



தன்னை ஏமாற்றியவரின் செல்போன் நம்பரையும் அவர் போலீஸாரிடம் கொடுத்தார். செல்போன் நம்பரை வைத்து போலீஸார் துப்பு துலக்கினர். ஆனால், நீண்ட நாள்களாக செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

இந்த நிலையில், தாம்பரம் காவல் சரகத்தில் இதே மாதிரியான மேலும் இரண்டு புகார்கள் போலீஸாருக்கு வந்தன. இதனால் போலீஸார் உஷாராகினர்.
உதவி கமிஷனர் அசோகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சையது, கணபதி மற்றும் போலீஸார் தலைமையிலான தனிப்படை டீம், திருமணம் செய்வதாகக் கூறி பெண்களை ஏமாற்றிவரும் நபரைத் தேடினர்.

அப்போதுதான், ஒரு முக்கிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதை வைத்து போலீஸார் பெண்களை ஏமாற்றியவரைப் பிடித்தனர். அவரின் பெயர் முருகன். 59 வயதாகும் அவர், பல பெண்களை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இரண்டவதாக திருமணம் செய்வதாகக்கூறி பேப்பர்களில் விளம்பரம் செய்வார் மாங்காடு பகுதியைச் சேர்ந்த முருகன்.

அந்த விளம்பரத்தில் எம்மதமும் சம்மதம், மாதச்சம்பளம் 50,000 ரூபாய் என்று குறிப்பிட்டிருப்பதோடு செல்போன் நம்பர் ஒன்றும் இருக்கும். அந்த நம்பரில் தொடர்பு கொள்பவர்களிடம் சாமர்த்தியமாகப் பேசுவார் முருகன். பிறகு நேரில் சந்திப்பதாகக் கூறுவார். அதை நம்பி வரும் பெண்ணிடம், தன்னுடைய முழு பயோடேட்டாவைச் சொல்வார்.






அதில் சில சோகக் கதையும் இருக்கும். அதைக்கேட்கும் பெண்கள், முழுமையாக முருகனை நம்பிவிடுவார்கள். பிறகு, உரிமையோடு அந்தப் பெண்களிடம் பழகுவார்.

இது, முருகனின் மீது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமையும். ஆனால், எக்காரணம் கொண்டும் பெண்ணிடம் எல்லை மீற மாட்டார். இதனால் பணம், நகைகளை இழந்த பல பெண்கள் எங்களிடம் புகார் கொடுக்கவில்லை.

தொடர்ந்து நம்பிக்கை ஏற்படும்வரை பழகும் முருகன், அதன்பிறகே தன்னுடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்குவார். நகை, பணத்தை திருமண ஆசையைக் காட்டி ஏமாற்றிவிட்டு அவர் பயன்படுத்திய சிம் கார்டையையும் தூக்கிப் போட்டுவிடுவார்” என்றனர்.


இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “முருகனுக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஆரம்பத்தில் இவர், செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தியுள்ளார்.




அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில்தான் அவருக்கு ஒரு செல்போன் கிடைத்துள்ளது. அதில் பேசியபோது இரண்டு பெண்களின் நட்பு கிடைத்துள்ளது.

முருகனின் பேச்சில் அந்தப் பெண்கள் மயங்கியுள்ளனர். அவர்களில் ஒருபெண் உங்களுக்குத் திருமணமாகிவிட்டதா என்று கேட்டுள்ளார். அதற்கு முருகன் இல்லை என்று கூறியுள்ளார்.

அதன்பிறகே இரண்டாவது திருமண ஆசையைக் காட்டி பல பெண்களை தன்னுடைய வலையில் வீழ்த்தியுள்ளார் முருகன். இவர், முன்னெச்சரிக்கையாகவே செயல்பட்டுள்ளார்.

அதாவது, சிசிடிவி கேமரா இல்லாத ஹோட்டலுக்குத்தான் பெண்களை அழைத்துச் சென்று பேசுவார். மேலும், சாதாரண செல்போன்களைத்தான் பயன்படுத்துவார்.

அடிக்கடி சிம் கார்டுகளை மாற்றியதால் போலீஸாரிடம் சிக்காமல் தப்பிவந்தார். இந்தச் சமயத்தில்தான் ஓசூர் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றியபோதுதான் வீடியோவில் சிக்கிக்கொண்டார். அந்த வீடியோ மூலம்தான் அவர் எங்களிடம் சிக்கினார்.

அவரிடமிருந்து 18 சவரன் நகைகள், 30,000 ரூபாய், 40 சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். முருகனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் நீள்கின்றன.

ஆனால், மூன்று பெண்களைத் தவிர மற்றவர்கள் புகார் கொடுக்கவில்லை. தேவைப்பட்டால் அவரை காவலில் எடுத்து விசாரிப்போம்” என்றார்.




கல்யாண மாப்பிள்ளை’ முருகன்

`முருகனுக்கு 59 வயதாகுகிறது. இதனால் அவரின் தலைமுடி வெள்ளையானதால் கறுப்பு ஹேர் டை அடித்து 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் போல மேக்அப் செய்துகொள்வார்.

அவரைச் சந்திக்க வரும் பெண்களிடம் பிசினஸ் மூலம் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாகக் கூறுவார். அவரின் ஸ்டைலும், நடவடிக்கைகளும் எப்போதும் பந்தாவாக இருக்கும்.

இதனால்தான் அவரை நம்பி பல பெண்கள் நகை, பணத்தை இழந்துள்ளனர்.  முருகனைப் பிடிக்க போலீஸார் அவரின் வீட்டுக்குள் நுழைந்தபோதுதான் அவரின் மோசடிகள் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியவந்துள்ளது.




மன்மதனாக வலம் வந்த முருகனுக்கு ஓசூர் பெண் முடிவுகட்டியுள்ளார். இல்லையென்றால் அவரின் மணமகள் தேவை விளம்பரம் இன்னமும் தொடர்ந்திருக்கும்” என்கின்றனர் போலீஸார்.

முருகனின் சுயரூபம் தெரிந்தவர்கள், அவரை `கல்யாண மாப்பிள்ளை’ என்றுதான் அழைக்கின்றனர்.
Previous Post Next Post