கிராமமே நேசித்த ஆசிரியையை கொலை செய்த கணவன் வெளியிட்ட அதிர்ச்சி வாக்குமூலம்

பொலன்னறுவை பாடசலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியையான மனோரி அசந்திகா கடந்த ஜூன் மாதம் 22ம் திகதி பாடசாலை செல்ல ஆயத்தமானபோது கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின்னர் அன்றைய தினம் பாடசாலை செல்லாது சாரியை கழற்றிவிட்டு பாவாடை, சட்டை அணிந்து கொண்டு தனது தொலைபேசியுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அன்றைய தினம் மனோரி அசந்திகாவின் மகளுக்கு நிறை அளக்கும் தினமாகும். பிள்ளையுடன் அசந்திகாவின் கணவரான மகிந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு நிறை அளந்து முடிந்ததும் அப்பெண்ணை மீண்டும் அவரின் வீட்டில் இறக்கி விட்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

மனோரி அசந்திகா கணவருடன் சண்டை போட்டு வெளியில் சென்று இரண்டு மூன்று மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வருவதை வழமையாக கொண்டுள்ளார்.

அன்றைய தினம் பல மணி நேரமாகியும் மனோரி அசந்திகா வீடு திரும்பவில்லை.

மாத்தளையில் அவரின் நண்பி வீட்டுக்கு சென்றிருப்பாரென நினைத்த மகிந்த, மாத்தளைக்குச் சென்றுள்ளார்.செல்லும் வழியில் மொறகஹகந்த வீதியில் நின்ற யானையைக் கண்டு பயந்து காரைத் திருப்பிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மகிந்த அசந்திகா தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் மகிந்த அசந்திக்காவின் அம்மாவிடமும் அவரைக் காணவில்லையென தெரிவித்துள்ளார். அம்மாவும் வந்து தனது மகளான அசந்திகவைத் தேடியுள்ளார்.அசந்திகா காணாமல் போய் ஒரு மாதம் கடந்தும் அவர் தொடர்பான தகவல் எதுவுமில்லை.

அதன் பின்னர் பொலிஸார் மகிந்தவின் கைத்தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான அறிக்கையைப் பெற்று விசாரணை நடத்தி உள்ளனர். அசந்திகா காணாமல்போன அன்றைய தினம் மகிந்த மொறஹககந்த பகுதியில் இருந்தமை கண்டுபிடித்துள்ளனர்.

அதன்பின்னர் மகிந்தவிடம் பொலிஸார் விசாரணை செய்தபோது அவர் சில கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மகிந்தவின் மூத்த சகோதரி கடந்த 17ம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மகிந்தவின் கையாலே அசந்திகா கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மகிந்தவை கைது செய்துள்ளனர். பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின்போது மகிந்த இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.அவர் தனது வாக்குமூலத்தில்,

அசந்திக்காவிற்கு பிள்ளை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. இப்போது இருக்கும் மகளுடனும் விருப்பமில்லை. பல ஆண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.

அன்றைய தினம் (22ம் திகதி ) காலையில் மகளுக்கு கடலை ஊட்டிக்கொண்டிருந்தார். மகள் கடலையை துப்பிக்கொண்டிருந்தாள். நான் பார்த்தபோது கடலை நன்றாக வேகவில்லை. கடைக்குச்சென்று சாப்பாடு ஏதாவது வாங்கி வர ஆயத்தமானபோது அசந்திகா என்னைத் தடுத்து விட்டு சண்டைபோட்டார்.

அதன்பின் நான் வலது கையில் மகளைத் தூக்கிக்கொண்டு அசந்திகாவின் கழுத்தை சுவரோடு சேர்த்து நெரித்தேன். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து விட்டார்.தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்தேன் எந்த உணர்வும் இல்லை. அசந்திகாவின் உடலை அறைக்குள் வைத்து பூட்டினேன்.

பின்னர் பிள்ளையை நிறை அளப்பதற்கு கொண்டு சென்று திரும்பி வந்ததேன். அன்று பிற்பகல் 5 மணியளவில் காரில் சடலத்தை ஏற்றிக்கொண்டு மொறகஹகந்த நீர்த்தேக்கத்தில் போட்டுவிட்டு வந்தேன் என கூறியுள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post