திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது!!

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலன் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்,  வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 31), திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் நிறுத்தும் இடத்தில் பொறுப்பாளராக பணிபுரிந்து வந்தார்.இவரது மனைவி கவுசல்யா (26). கடந்த 11-ந் தேதி ராஜ்குமார் இரவு 8 மணிக்கு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது திருப்பத்தூர் கவுதமபேட்டையை சேர்ந்த துளசிராமன் (30) என்பவர் ராஜ்குமாரின் வீட்டிற்கு வந்து, அவரை வெளியே அழைத்து சென்றார். அதன்பிறகு வெகுநேரமாகியும் ராஜ்குமார் வீட்டிற்கு வரவில்லை.

இந்த நிலையில் மறுநாள் காலை திருப்பத்தூர் அருகே உள்ள பெரியகுனிச்சியில் கோவிந்தன் என்பவரது வீட்டின் பின்புறம் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் ராஜ்குமார் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராஜ்குமாரின் மனைவி கவுசல்யா, திருப்பத்தூர் அருகே எலவம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (31), துளசிராமன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராஜ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து கவுசல்யாவை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக கவுசல்யா அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், ரமேசுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். அதனை கணவர் ராஜ்குமார் கண்டித்தார். இதனால் ராஜ்குமாரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.அதன்படி கடந்த 11-ந் தேதி இரவு ராஜ்குமாரை பெரியகுனிச்சிக்கு அழைத்து வந்து, அவருக்கு மது அருந்த கொடுத்தோம். பின்னர் போதையில் இருந்த ராஜ்குமாரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம். இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறி உள்ளார்.

இந்த கொலை தொடர்பாக ரமேஷ், துளசிராமன் ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post