நள்ளிரவில் வந்த செல்போன் அழைப்பால் அதிர்ச்சி : மனைவி, விவசாயியைக் கொன்ற கட்டடத் தொழிலாளி!

கோவில்பட்டி அருகிலுள்ள மும்மலைப்பட்டி கிராமத்தில் தவறான தொடர்பால், மனைவியையும் விவசாயியைப் படுகொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரிகிருஷ்ணன்- தங்கமாரியம்மாள் (கட்டத்துக்குள் கொலை செய்யப்பட்ட பெருமாள்!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள மும்மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்.

இவர் கேரள மாநிலத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி தங்கமாரியம்மாள்.இவர்களுக்கு ஒரு மகளும் இரு மகன்களும் உள்ளனர். இதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கட்டடத் தொழில் மற்றும் விவசாயமும் செய்து வந்துள்ளார்.

இவருக்கும் திருமணமாகி 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அரிகிருஷ்ணன் கட்டட வேலைக்காக அடிக்கடி கேரளா சென்றுவிடுவது வழக்கம்.

இந்தச் சூழலில் அரிகிருஷ்ணனின் மனைவி தங்கமாரியம்மாளுக்கும் பெருமாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.அரிகிருஷ்ணனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தினந்தோறும் மாத்திரை எடுப்பது வழக்கம்.கணவன் அரிகிருஷ்ணன் ஊருக்கு வரும்போது, தங்கமாரியம்மாள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு, பெருமாளுடன் பழகி வந்துள்ளார்.இந்தத் தகவல் உறவினர்களுக்குத் தெரியவந்து இருவரையும் கண்டித்துள்ளனர். மனைவி மீது உறவினர்கள் கூறிய புகாரை, அரிகிருஷ்ணனும் நம்பவில்லை என்பதால், இருவரும் சுதந்திரமாக இருந்து வந்துள்ளனர்.

கேரளாவில் தற்போது மழை பெய்ததால் அரிகிருஷ்ணன் ஊருக்கு வந்துள்ளார். வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரையைச் சாப்பிடவில்லை.

நள்ளிரவில் பெருமாள், தங்கமாரியம்மாளுக்குப் போனில் அழைத்துவிட்டு, இருவரும் வழக்கமாக சந்திக்கும் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இவர்களை அரிகிருஷ்ணன் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது மட்டுமின்றி, ஆத்திரத்தில் அரிவாளால் இருவரையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு, கடம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தவறான தொடர்பால் இரட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post