`அந்த அங்கிள்தான் எல்லாத்துக்கும் காரணம்’- மாணவ, மாணவிகள் கண்ணீர் வாக்குமூலம்

சென்னை திருமுல்லைவாயலில் செயல்பட்ட சிறுவர், சிறுமியர் இல்லத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கண்ணீர் மல்க போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில் 15 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்ட சிறுவர், சிறுமிகள் இல்லத்தில் தங்கிப்படித்த மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஆவடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபாராணி விசாரித்து வருகிறார். பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளிடம் போலீஸார் தனித்தனியாக விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவல்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சிறுவர், சிறுமிகள் இல்லத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் தனித்தனியாக மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினோம்.அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் எங்களுக்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட காலமாக இல்லத்தில் பணியாற்றிவரும் பாபு சாமுவேல்தான் இந்த வழக்கின் முக்கியமானவர்.

அவர், தலைமறைவாக இருக்கிறார். அவரைத் தேடிவருகிறோம். அவரால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பட்டியல் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதுதொடர்பாக அவரிடம் விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். இந்த இல்லத்தில் அநாதைக் குழந்தைகளும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்களின் குழந்தைகளும் தங்கியுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு என்ன நடந்தாலும் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற தைரியத்தில்தான் பாபு சாமுவேல் மற்றும் அவரின் கூட்டாளிகள் பாலியல் தொல்லைகளைக் கொடுத்துள்ளனர்.

பாபு சாமுவேலுக்கு 54 வயதாகுகிறது. திருமணமானவர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த பாபுசாமுவேல், தன்னை ஒரு அநாதை என்று கூறிதான் இந்த இல்லத்தில் சேர்ந்துள்ளார்.பாபு சாமுவேலால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் 10 வயதுக்குக் குறைவானவர்கள். இதனால் சில மாணவிகள் தங்களுக்கு என்ன கொடுமை நடக்கிறது என்ற விவரம்கூட தெரியவில்லை. பாபு அங்கிள் சொல்வதைச் செய்வோம்.

இல்லையென்றால் அவர் எங்களை அடிப்பார், சாப்பாடு தரமாட்டார் என்று எங்களிடம் தெரிவித்துள்ளனர். பாபு சாமுவேல், மாணவிகளை மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சில நாளுக்கு முன்பு ஒரு மாணவனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவன் படிக்கும் பள்ளி ஆசிரியர் மாணவனிடம் விசாரித்துள்ளார்.

அப்போதுதான் அவன் முழு விவரத்தைச் சொல்லியுள்ளான். இதனால் பள்ளி மூலம் அம்பத்தூர் மாஜிஸ்திரேட் அனிதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே அவர், சட்ட விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை மாணவ, மாணவிகளுக்கு நடத்தியுள்ளார். அப்போது மாணவிகளும் உண்மையை மாஜிஸ்திரேட்டிடம் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் பள்ளி தரப்பில், பாபு சாமுவேலை அழைத்து விசாரித்துள்ளனர். இதனால் உஷாரான அவர், கடந்த வாரத்தில் இல்லத்தில் விடுமுறை கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

அப்போது இதுவரை அநாதை என்று கூறிய அவர், கடந்த 6 மாதங்களாகத் தாம்பரத்தில் அக்காள் வீடு இருப்பதாக அவரின் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

பாபு சாமுவேல் என்ற அங்கிள்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று ஓட்டுமொத்த மாணவ, மாணவிகளும் போலீஸாரிடம் கூறியுள்ளனர். இதனால் பாபு சாமுவேலை தேடிவருகிறோம்” என்றனர்.

யார் இந்த விமலா, ஜேக்கப், அங்கிள் பாபு?

இந்த இல்லத்தை நடத்திய விமலா, ஜேக்கப் ஆகியோர் அந்தப்பகுதியில் இரும்புக் கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். தற்போது அந்த கம்பெனியை வாடகைக்கு விட்டுள்ளனர்.

2015-ம் ஆண்டு வரை இந்த இல்லத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்பிறகு, 4 ஏக்கர் இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதனால், இல்லம், அனுமதியில்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்துள்ளது. இந்த இல்லத்தில் ஜெர்மனியிலிருந்து அதிகளவில் பணம் 2015-ம் ஆண்டு வரை வந்துள்ளது. அதற்கான ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது விமலா, ஜேக்கப் ஆகியோர் பள்ளி ஒன்றையும் நடத்திவருகின்றனர். இதனால்தான் திருமுல்லைவாயலிலிருந்து வில்லிவாக்கத்துக்கு குடியிருப்பை மாற்றியுள்ளனர்.

பாபு சாமுவேல் குறித்து விமலா, ஜேக்கப் ஆகியோரிடம் விசாரித்தபோது அவர் ஒரு அநாதை என்றுதான் எங்களிடம் சேர்ந்தார் என்ற தகவலை மட்டும்தான் கூறியுள்ளனர்.

இதனால் பாபு சாமுவேல் குறித்த தகவல் எதுவுமில்லை. இருப்பினும் அவரின் நண்பர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. மேலும், இல்லத்திலிருந்து 48 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

அதில் 4 பேரின் பெற்றோர் அந்த இல்லத்திலேயே வேலை பார்த்துள்ளனர். இதனால், அவர்களிடம் மாணவ, மாணவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.மற்றவர்கள்தான் வேறு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் காப்பகத்தில் வேலை பார்த்தவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் வெறும் 2,000 மற்றும் 3,000 ரூபாய்தான். மூன்று வேளை உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

இல்லத்திலேயே அவர்கள் தங்கியுள்ளனர். இதனால் நீண்ட காலமாக மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
Previous Post Next Post