`இவர்தான் சி.எம் மனைவி!’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக முதல்வர் மட்டுமல்ல அவர்களுக்கு நெருக்கமானவர்கள்கூட சென்னையைவிட்டு வெளி வந்தாலே படைகளோடு வருவது வழக்கம்.

ஆனால், தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா ஊடக வெளிச்சம் படாமல் சர்வ சாதாரணமாகப் பொதுமக்களோடு மக்களாகத் தங்கள் சொந்த ஊருக்கு எடப்பாடிக்கு அடிக்கடி வந்து செல்லுகிறார்.


இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, “முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா அரசியலில் தலையிடுவதோ அரசியல்வாதிகளோடு நெருக்கமாகப் பழகுவதோ கிடையாது.

அவருடைய வேலையை அவரே பார்ப்பார். சாதாரண மனிதராகத்தான் எப்போதும் இருந்திருக்கிறார். பழனிசாமி அமைச்சராக இருந்தபோதுகூட வீட்டுக்கு வரும் கட்சிக்காரர்களைப் பார்த்து கையெடுத்து புன்னகை செய்துவிட்டுச் சென்றுவிடுவார்.



அவர்களிடம் கட்சி நிலவரங்கள், நாட்டு நடப்பு பற்றி எதுவும் பேசமாட்டார். எடப்பாடி பழனிசாமி முழுநேர அரசியல் பணியில் இருப்பதால் வீட்டு மற்றும் தோட்டப் பணிகள் முழுவதும் ராதா கவனித்துகொள்வார்.

தன் கணவர் முதல்வர் ஆனதால் சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். மாதம் இருமுறை முதல்வரோடு ஊருக்கு வருவது மட்டுமல்லாமல் ராதாவே தனியாக அடிக்கடி ஊருக்கு வந்து தன் மாமியாரையும் அப்பா, அம்மாவையும் பார்த்துட்டுப்போவார்.



தன்னை முதல்வரின் மனைவி என்று வெளியில் யாருக்கும் தெரியாத அளவுக்கு சாதாரணமாக வந்துட்டு போவார். விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்வதற்குகூட உரிய தொகையைக் கொடுத்துவிட்டுதான் காரை எடுத்துச் செல்லுவார்” என்று தெரிவித்தனர்.
Previous Post Next Post