திருட்டு முயற்சியில் யாழ் பெண்கள்; 10 அடி உயரமான மதிலை பாய்ந்து ஓடிய இளம் யுவதி!

யாழ். குப்பிளான் சந்திக்கு அருகில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை- 10) பிற்பகல் இடம்பெற்ற திருட்டு முயற்சி குடும்பப் பெண்ணின் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.குறித்த திருட்டு முயற்சியில் மூன்று பெண்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது:- யாழ். குப்பிளான் சந்தியிலிருந்து கிழக்குப் பக்கமாக சுமார் 50 மீற்றர் தூரத்தில் நடுத்தர வயதுத் தம்பதியினர் வியாபார நிலையமொன்றை நடாத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மனைவி அயலிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றுக்குச் சென்றுவிட கணவரும் வியாபார நிலையத்தைப் பூட்டி விட்டு வேறொருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பிள்ளைகளும் வெளியே சென்றுள்ளனர்.இந்தச் சமயம் பார்த்து வீட்டிற்குள் உள்நுழைந்த மூன்று பெண்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் திருமண வீட்டால் குடும்பப் பெண் வீடு திரும்பிய போது இரண்டு பெண்கள் வீட்டு வளவுக்குள்ளிருந்து வெளியே வந்துள்ளனர். சந்தேகமடைந்த குறித்த குடும்பப் பெண் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்குள்ள அறையொன்றில் இளம் பெண்ணொருவர் சல்லடை போட்டுத் தேடுதல் நடாத்தியுள்ளார்.

வீடு திரும்பிய வீட்டு உரிமையாளரான குடும்பப் பெண்ணைப் பார்த்து வீட்டில் திருட்டில் ஈடுபட்டிருந்த பெண் “நீங்கள் யார்?” என வினாவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து வீட்டு உரிமையாளரான குடும்பப் பெண் திருட்டில் ஈடுபட்டிருந்த இளம் பெண்ணைத் திருட்டில் ஈடுபடாதவாறு தடுப்பதற்காகப் போராடியுள்ளார்.இதனையடுத்து குடும்பப் பெண் சம்பவம் தொடர்பில் தனது உறவினரொருவருக்குத் தொலைபேசியில் தெரிவிப்பது போன்று பாசாங்கு செய்துள்ளார். இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட பெண் திருட்டு முயற்சியைக் கைவிட்டு மதில் பாய்ந்து தப்பியோடியுள்ளார்.

மதிலேறிப் பாய்ந்த திருட்டுப் பெண்ணை அயலிலுள்ள சிலர் இணைந்து துரத்திய போதும் குறித்த பெண் அங்கிருந்த விரைவாக ஓடி அப்பகுதியிலிருந்த சுமார் பத்து அடி உயரமான மதிலையும் பாய்ந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post