10ம் வகுப்பு மாணவனுடன் காதல்: ஊரைவிட்டு தலைமறைவான கேரள ஆசிரியை


10-ஆம் வகுப்பு மாணவனைக் காதலித்து, அந்த மாணவனுடன் சென்னை விடுதியில் தங்கியிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த 40 வயது பள்ளி ஆசிரியையை அம்மாநில பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பள்ளி ஆசிரியை டியோரனா தம்பி. சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியையான இவர் 10 வகுப்பு மாணவனுடன் முறையற்ற உறவை மேற்கொண்டிருந்ததாகவும்,

கடந்த 23-ஆம் திகதி யாருக்கும் தெரியாமல் மாணவனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவனைக் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட கேரள பொலிசார் செல்ஃபோன் சிக்னல் மூலம் ஆசிரியை சென்னை சூளைமேட்டில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சென்னை சென்ற கேரள பொலிசார் சூளைமேடு பொலிசாரின் உதவியோடு தேடி வந்தனர். இதனிடையே விடுதி ஒன்றில் ஓய்வெடுக்கச் சென்ற கேரள பொலிசார் அங்கு புகைப்படங்களை காண்பித்து விசாரித்த போது இருவரும் தாய் - மகன் எனக் கூறிக் கொண்டு கடந்த 4 நாட்களாக தங்கியிருப்பது தெரியவந்தது.

ஆசிரியை டியோரனா தம்பி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கேரள பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post