‘போதையில் 13 வயது சிறுவனைக் கடித்த ஆசாமி!’ – ஈரோட்டில் நடந்த பயங்கரம்!


ஈரோட்டில் போதை ஆசாமி ஒருவர், 13 வயது சிறுவனை வெறி கொண்டு விரட்டி விரட்டிக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு நேதாஜி சாலைக்கும், கச்சேரி சாலைக்கும் இடையே உள்ள பூக்கடையில் சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வேலை பார்த்து வருகிறார்..

கொல்லம்பாளையம் ரயில்வே காலனி பள்ளியில் படிக்கும் சிறுவன் பள்ளி விடுமுறையின்போது பூக்கடையில் பகுதி  நேரமாக வேலைபார்த்து வந்துள்ளார். நேற்று  சிறுவன் பூக்கடையில் வேலையில் இருந்தபோது,

மதியம் சுமார் 3.30 மணியளவில் தள்ளாடியபடி போதை ஆசாமி ஒருவர் சிறுவனை நோக்கி வந்திருக்கிறார். திடீரென சிறுவன் மீது பாய்ந்த அந்த ஆசாமி, சிறுவனை கீழே தள்ளிவிட்டு கை, கால் உள்ளிட்ட பல இடங்களில்  கடித்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள், ஓடிவந்து அந்த போதை ஆசாமியை நையப் புடைத்து, அவனிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றியியுள்ளனர். சிறுவனின் உடலில் இருந்து ரத்தம் கொட்டியதைக் கண்டு கோபமடைந்த பொதுமக்கள், ஆத்திரம் தாங்காமல் அந்த ஆசாமியை விரட்டிப் பிடித்து அடித்துள்ளனர்.


அதுவரை தெளிவாக இருந்த போதை ஆசாமி, பொதுமக்கள் அடிக்கவும் திடீரென மயக்கம் அடைந்ததைப் போல் நடு ரோட்டில் படுத்து பாவனை செய்ய ஆரம்பித்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத மேலும் ஒரு பயங்கரம் அரங்கேறியது.

அதுவரை மயங்கிக் கிடந்தவனைப் போல நடித்த அந்த ஆசாமி, திடீரென எழுந்து, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவரை கீழே தள்ளி கடிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்து சுற்றி நின்றிருந்த கூட்டம் தெரித்து ஓடியது.

இளைஞரைக் காப்பாற்ற முன்வந்த மேலும் சிலரையும், அந்த ஆசாமி ஆக்ரோஷத்துடன் கடித்துக் குதற முயற்சி செய்தார். ஒரு வழியாக அந்த ஆசாமியின் கையையும், வாயையும் கட்டி சாலையோரம் படுக்க வைத்தனர்.அதன்பின்னர், சம்பவ இடத்துக்கு  வந்த காவல்துறையினர்  போதை ஆசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த போதை ஆசாமி ஈரோடு பூந்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

ரகளை செய்த போதை ஆசாமி, மதுபானத்தோடு வேறு சில போதை வஸ்துக்களையும் பயன்படுத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவ்வளவு சம்பவமும் ஈரோடு எஸ்.பி அலுவலகத்துக்கு அருகே நடைபெற்றது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

இந்த சம்பவத்துக்குப் பிறகாவது, ஈரோட்டில் தாராளமாகப் புழங்கும் போதை வஸ்துக்களையும், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்றவற்றையும் ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post