ரூ.50 லட்சம் நிதி திரட்டியது துப்புரவு தொழிலாளி சடலம் அருகே கதறும் மகன் புகைப்படம்


டெல்லியின் மேற்கு தாப்ரி பகுதியில் வசிக்கும் 37 வயது அனில் என்பவர் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்துவிட்டார்.

ராணி என்ற பெண்ணுடன் வாடகை வீட்டில் வசிந்துவந்தார் அனில். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.

செப்டம்பர் 14 அன்று அப்பகுதியில் வாழும் ஒருவர் சாக்கடை சுத்தம் செய்ய அனிலை அழைத்தார். அனில் இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு சாக்கடையில் பாதுகாப்பாக இறங்கினாலும், கயிறு அறுந்து போனதால் 20 அடி ஆழமுள்ள சாக்கடையில் விழுந்துவிட்டார்.

சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட அவர், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு இறந்துவிட்டார்.



உள்ளாட்சி ஊழியராக அல்லாமல், தனிப்பட்ட முறையில் அனில் சாக்கடை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துப்புரவு பணிக்கு அனிலை அழைத்த வீட்டு சொந்தக்காரர் சத்பீர் கலா மீது உள்நோக்கத்துடன் கொலை முயற்சியில் ஈடுபட்டது, அலட்சியத்தினால் மரணத்திற்குக் காரணமானது, எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் என பல பிரிவிகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டதால், இதுவரை கைது செய்யப்படவில்லை.

மரணத்திற்கு யார் காரணம்?

பாதுகாப்பில்லாமல் துப்புரவு பணியில் ஈடுபட்ட ஐந்துபேர் வெவ்வேறு சம்பவங்களில் இந்த மாதத்தில் இறந்துவிட்ட நிலையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் தற்போது மேலும் ஒரு மரணம் நிகழ்ந்திருப்பது கேள்விகளை எழுப்புகிறது.

இதுபோன்ற சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் உயிரிழப்பவர்களுக்கு அரசோ, தனியாரோ எந்தவித உதவிகளையும் செய்வதில்லை என்று செப்டம்பர் 11ஆம் தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியில் கூறப்பட்டுள்ளது.






இறுதிச் சடங்குகளுக்கு கூட பணமில்லாத ஏழைக் குடும்பம் அது. வறிய நிலையில் இருக்கும் அந்த குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக சமூக ஊடகங்களில் சிலர் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அனிலின் இறுதிச்சடங்கிற்காகவும், அவரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவதற்காகவும் பொதுமக்களிடம் நிதி திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த கட்டுரை எழுதப்படும் வரை, 50 லட்ச ரூபாய் நிதி சேர்ந்துள்ளது.

முயற்சியை மேற்கொண்டது யார்?

மும்பையில் உள்ள கேட்டோ நிறுவனம் சமூக ஊடகங்களில் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது.

அனில் இறந்த பிறகு, “டெல்லியில் சாக்கடை துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர் இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்கை செய்யவும் அந்தக் குடும்பத்துக்கு வசதி இல்லை. உதவுங்கள்” என்ற அறிவிப்போடு அந்நிறுவனம் நிதி திரட்டுகிறது.

இந்த சமூக ஊடக பக்கத்தில் அனிலின் சடலத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு சம்பவம் தொடர்பான விவரமும் தரப்பட்டுள்ளது.

அனிலின் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப நலனுக்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் என்றும், எதிர்காலத்திற்காக குறிப்பிட்ட தொகை சேமிப்பில் வைக்கப்படும் என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

15 நாட்களில் 24 லட்ச ரூபாய் வசூல் செய்யலாம் என்ற எதிர்பார்ப்புடன் இந்த நிதி திரட்டும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

ஆனால், செப்டம்பர் 17 தேதி தொடங்கி இதுவரை மொத்தம் 50 லட்ச ரூபாய் நிதி சேர்ந்துள்ளது. பேடிஎம், டெபிட் கார்ட், இணைய வங்கி பரிவர்த்தனைகள் போன்ற பல்வேறு பண பரிமாற்ற முறைகளில் 2,337 பேர் நிதியளித்துள்ளனர்.






நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிக பணம் இன்னும் 13 நாட்கள் மீதமிருக்கும் நிலையில் சேர்ந்துவிட்டாலும்கூட, இந்த நிதி திரட்டல் தொடரும் என கேட்டோவின் மூத்த நிர்வாகி கன்வல்ஜித் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

”குறிப்பிட்ட இலக்கை விட அதிக பணம் சேர்வது, தேவைப்படும் மனிதர்களுக்கு நல்லதுதானே? கேட்டோவின் கட்டணங்கள் (5% கேட்டோ கட்டணம், ஜி.எஸ்.டி, பேமெண்ட் கேட்வே கட்டணம் என மொத்தம் 9.44%) கழித்த பிறகு மீதமுள்ள தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும்” என்று கன்வல்ஜித் சிங் கூறுகிறார்.

ஆனால், நினைத்ததற்கு அதிகமான தொகை சேர்ந்துவிட்டதால், காலக்கெடுவுக்கு முன்னரே நிதி திரட்டும் பணியை நிறுத்திவிடலாமா என்பதைப் பற்றியும் ஆலோசித்து வருவதாக, நிறுவனத்தின் தலைமை இயக்குநர் வருண் சேட் கூறுகிறார்.

நிதி திரட்டும் பணி முடிவடைந்த நாளில் இருந்து 24 முதல் 72 மணி நெரத்திற்குள், தொகை பயனாளியின் கணக்கிற்கு மாற்றப்படும் என்றும் வருண் தெரிவித்தார்.






இவ்வளவு பணத்தை அந்த குடும்பம் என்ன செய்யும்?

சில நாட்களுக்கு முன்புவரை குப்பைகளை எடுத்தும், சாக்கடையை சுத்தம் செய்தும் வருமானம் ஈட்டிவந்த ஏழை குடும்பத்திடம் ஒரே நாளில் லட்சக்கணக்கில் பணம் வந்து சேர்ந்தால் அந்த குடும்பம் அதை எப்படி பயன்படுத்தும்?

”அந்த பணம் கிடைத்தால், குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுப்பேன், படிக்காததால் தானே நாங்கள் இந்த வேலையை செய்கிறோம்” என்கிறார் அனிலுடன் வசித்துவந்த ராணி என்ற பெண்.

”குழந்தைகளை நன்கு படிக்க வைத்து, அவர்களை டாக்டராகவும், போலீஸ் அதிகாரியும் உயர்த்த வேண்டும் என்று அனில் கனவு கண்டார். உண்மையிலேயே அவரது கனவு பலிக்கும் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

அவரது கனவை நான் நிறைவேற்றுவேன். பெரிய அளவில் இல்லாவிட்டாலும், குறைந்தது துப்புரவு பணியில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லாத அளவாவது படிக்க வைப்பேன். இந்த பணத்தில் ஒரு வீடு வாங்குவேன். இனிமேல் வீடு வீடாக சென்று குப்பை எடுக்கும் வேலை செய்ய வேண்டாம்.”






அனிலின் மரணம் பரபரப்பாக பேசப்படுவது ஏன்?

அனிலின் சடலத்தின் அருகில் நின்றுக் கொண்டு அழுதுக் கொண்டிருந்த அவரின் மகனின் புகைப்படத்தை ஷிவ் சன்னி என்ற பத்திரிகையாளர் டிவிட்டரின் பகிர்ந்திருந்தார். அதையடுத்து அனிலின் மரணம் சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது.

சொற்ப நேரத்திலேயே அந்த புகைப்படம் ஆயிரக்கணக்கான மக்களால் பகிரப்பட்டது. பிறகு, அனிலின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளும் தொடங்கியது. பிரபல பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்தார்கள் அது விரைவிலேயே பெருமளவிலான பணம் சேர்வதற்கான காரணமானது.

சுகாதாரம் மற்றும் பேரிடர் காலத்தில் உதவி செய்யும் உதய் பவுண்டேஷன் மூலம்தான் தனக்கு அனிலின் குடும்பத்தின் நிலைமை தெரிந்த்தாக கூறும் கன்வல்ஜீத் சிங், அவர்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி நேரடியாக பிரசாரம் செய்தோம் என்று கூறுகிறார்.



கேட்டோவின் மூத்த நிர்வாகி கன்வல்ஜித் சிங்

கார்கி ராவத், யஷ்வந்த் தேஷ்முக் மற்றும் ஷிவ் சைனி ஆகியோர் அனில் பிரசாரத்திற்கான இயக்கத்தை ட்வீட் செய்தார்கள். மனோஜ் பாஜ்பாயி மற்றும் பிரபலங்கள் பலரும் அனிலின் குடும்பத்திற்கு நிதி திரட்டுவதற்காக டிவிட்டர் செய்திகளை பகிர்ந்தார்கள்.

சமூக ஊடகங்களினால் எப்படி பெருமளவு பணம் வசூலிக்க முடிகிறது?



இத்தகைய சம்பவங்கள் தினசரி நம்மைச் சுற்றி நடந்தாலும், அவை பல சந்தர்ப்பங்களில் நமது கவனத்தை ஈர்ப்பதில்லை.

சில நேரங்களில் அவற்றை நம்பாமல் புறக்கணித்துவிடுகிறோம். ஆனால் சமூக ஊடகங்கள் மூலம் ஒரு சம்பவம் நம் முன் வைக்கப்படும்போது,

பலர் இதை நம்புகிறார்கள். கூட்டு பாலியல் வல்லுறவு, கேரள பேரழிவு மற்றும் இப்போது அனில் குடும்பம் பிரசாரம் என பல உதாரணங்களை சுட்டிக்காட்டலாம்.

கத்துவா கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கும்பல்கூடி கொலை செய்வது போன்ற வன்செயல்களுக்கு எதிராக பிரசாரத்தை முன்னெடுப்பவர் கிரெளட் நியூசிங் நிறுவனர் பிலால் ஜைதி. ‘சமூக ஊடகங்கள் பரவலான பிறகு, பலர் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள தொடங்கினார்கள். அது நாளடைவில் விரிவடைந்து உதவி தேவைப்படுவர்களுக்கு கைகொடுக்கும் ஊடகமாகவும் பயன்படுத்தப்படுகிறது’ என்று கூறுகிறார்.



ரெளட் நியூசிங் நிறுவனர் பிலால் ஜைதி

“முதலில் தங்களைப் பற்றிய செய்திகளை மட்டுமே பதிவு செய்துவந்தாலும், பிறகு மற்றவர்களால் பகிரப்படும் உணர்ச்சி மிகுந்த சம்பவங்களையும் உணரத் தொடங்கினார்கள்.

மேலும் இதுபோன்ற சம்பவங்களை ஏதாவது ஒரு விதத்தில் தடுத்த நிறுத்த தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும், அதை பகிர்ந்துக் கொண்டால் யாராவது உதவி செய்தாலும் நல்லதுதானே என்ற உணர்வில் உணர்ச்சிகரமான வார்த்தைகளை இதுபோன்ற பதிவுகளில் சேர்த்து பகிர்கிறார்கள். இதுபோன்ற உணர்வுகளே பிரசாரங்களாக மாறி செயல்படுகிறது” என்கிறார் பிலால் ஜைதி.

தந்தையின் சடலத்துடன் அழுது கொண்டு நின்றிருக்கும் மகனின் புகைப்படம் மக்களின் உணர்வுகளை தூண்டுவதாக இருந்ததால், நிதி வழங்க சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் முன்வந்தனர். அதுவே விரைவில் இத்தனை பணம் சேர்ந்ததற்கான காரணம்” என்கிறார் அவர்.

இப்படி பலரால் கொடுக்கப்ப்டும் நிதியானது உரியவர்களுக்கு சரியாக சென்று சேரும் என்று மக்கள் நம்புகின்றனர் என்பதையும் பிலால் ஜைதி குறிப்பிடுகிறார்.



“இன்றைய காலத்தில் பண விஷயத்தில் யாரையும் நம்ப முடிவதில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் இத்தகைய பிரசாரங்கள் உங்கள் பணம் எங்கு சென்றடைகிறாது என்பதற்கான சான்றுகளை தருகின்றன, உங்களுடைய பணம் உரிய இடத்தை சென்றடைவதற்கான உத்தரவாதம் உங்களுக்கு கிடைக்கிறது.


சமூக ஊடகங்களின் இதுபோன்ற பிரசாரத்தில் இத்தகைய அனைத்துத் தகவல்களும் உங்களுக்கு வெளிப்படையாக தெரிந்துவிடுகிறது” என்பதே கிரெளட் ஃபண்டிங் என்ற நிதி திரட்டல், சமூக ஊடகங்களின் மூலம் சுலபமாகியிருப்பதாக கூறுகிறார் பிலால் ஜைதி.
Previous Post Next Post