கருவை கலைத்துவிடு அல்லது 5 லட்சம் ரூபாய் பணம் கொடு: மனைவியை துன்புறுத்திய கணவன்

தமிழகத்தின் கோவையில் இரண்டாவதும் கருவுற்ற மனைவியை கருவை கலைக்க வலியுறுத்தி துன்புறுத்திய கணவன் மீது பொலிசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருபவர் பூபதி. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சுதா என்பவரை திருமணம் முடித்துள்ளார்.

இவர்களுக்கு பத்து வயதில் ஜாக்லின் ரிஷியா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

திருமணம் நடந்ததில் இருந்து பூபதி வரதட்சணை கேட்டு, மனைவியை கொடுமைப்படுத்துவதால் இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களாக பூபதியும் அவர் மனைவியும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக மருத்துவரிடம் சென்ற சுதா, அவர் கருவுற்றதை தெரிந்துக்கொண்டார். இதனை தன் கணவர் பூபதியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் பூபதிக்கு தன் மனைவி இரண்டாவது முறையாக கருவுற்றதில் விருப்பமில்லை. இதனால் தன் மனைவியை கருவை கலைக்குமாறு பூபதி வற்புறுத்தியுள்ளார்.

மேலும் கருவை கலைத்துவிடு அல்லது 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கூறி மனைவி சுதாவை கடுமையாக பூபதி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த சுதாவின் உறவினர்கள் பந்தயசாலை காவல் நிலையத்தில் பூபதி மீது புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக பேசிய சுதாவின் உறவினர்கள், பூபதி தாக்கியதில் அவரது மனைவி சுதா கடுமையாக பாதிக்கப்பட்டு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் வரதட்சணை கேட்டு பூபதியும், அவரது தாயார் குப்பாயியும் கொடுமைபடுத்துவதாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Previous Post Next Post