இலங்கையில் வைத்தியருக்கு 6மனைவி – தும்புத்தடி உடையும் வரை முதல் மனைவி தாக்குதல்


மனைவி தும்புத்தடி உடையும் வரை தன்னை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்த மருத்துவரொருவருக்கு குறித்த சட்டரீதியான மனைவிக்கு மேலதிகமாக 5 மனைவிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் மொத்தமாக 13 பிள்ளைகள் இருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சட்ட ரீதியான மனைவிக்கு 3 பிள்ளைகள் இருப்பதுடன், இந்த மூன்று பிள்ளைகளில் இரண்டரை வயது மகனை அழைத்து செல்ல வந்த போதே, மனைவி தும்புத்தடி உடையும் வரை கணவனை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

மனைவியின் தாக்குதலை பொருட்படுத்தாது மகனை அழைத்துச் சென்று அந்த மருத்துவர் தனது இரண்டாவது மனைவியிடம் ஒப்படைத்துள்ளார்.இந்த நிலையில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் தலையிட்டு பிள்ளையை மீட்டு முதல் மனைவியிடம் ஒப்படைத்துள்ளனர்.

தும்புத்தடி உடையும் வரை மனைவி தன்னை தாக்கியதாக மருத்துவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எஸ்.தயாரத்னவின் விசேட ஆலோசனையின் பேரில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரதீப் விக்ரமரத்ன மற்றும் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி பரீஷிகா இனோகா குமாரி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மருத்துவர் மற்றும் அவரது சட்டரீதியான மனைவி ஆகியோரை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.விசாரணையின் போது அந்த மருத்துவர் கொழும்புக்கு வெளியில் உள்ள பிரதேசம் ஒன்றில் இருக்கும் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த நிலையில், சேவையை கைவிட்டுச் சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மருத்துவரின் சட்ட ரீதியான முதல் மனைவி, மருத்துவருக்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆடம்பர வீட்டில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகின்றதுடன் அவர், தனது கணவனுக்கு மேலும் 5 மனைவிகள் இருப்பது குறித்து திருமணமாகி சில காலங்களின் பின்னரே அறிந்து கொண்டுள்ளார்.எவ்வாறாயினும் மனைவி, மருத்துவரை தும்புத்தடி உடையும் வரை தாக்கியதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணை இணக்க சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.
Previous Post Next Post