போதநாயகியை நாள் முழுவதும் அடைத்து வைத்து தாக்கினார்; அறையில் பூட்டி வைத்தார்: செந்தூரன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு!

போதநாயகியை ஏமாற்றியே செந்தூரன் திருமணம் செய்தார், திருமணத்திற்கு முன்னரே செந்தூரனால் தாக்கப்பட்டு போதநாயகி மயக்கமடைந்திருந்தார்“ இப்படி அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியிருக்கிறார் போதநாயகியின் தாயார்.

வவுனியாவை சேர்ந்த போதநாயகி நடராஜா கிழக்கு பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். செந்தூரன் என்ற நபரை திருமணம் செய்திருந்த நிலையில், போதநாயகி அண்மையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவரது மரணத்திற்கு நீதிகேட்டு, நேற்று கிழக்கு பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய போதே, போதநாயகியின் தாயாரான கமலா நடராஜா இந்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- “அவர் திருமணத்திற்காக தந்த சாதக குறிப்பும் போலியானது. ஏமாற்றித்தான் திருமணம் செய்தார் என்பதை பின்னர்தான் அறிந்தோம்.

திருமணத்திற்கு முன்னர் கூரைச்சேலை வாங்க வவுனியா நகரத்திற்கு சென்றிருந்தோம். அங்கு வந்த செந்தூரன் போதநாயகியை மோட்டார்சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு கூட்டிச் சென்றார். நாங்கள் வருவதற்கு முன்னரே- போதநாயகியின் வயதான தந்தையின் முன்னால், அவரை கடுமையாக தாக்கினார்.

முகம் முழுக்க இரத்த காயம். போதநாயகி மயங்கி விழுந்து விட்டார். அப்படியே செந்தூரன் விட்டுவிட்டு போய்விட்டார். நாங்கள்தான் அவரை தூக்கி மயக்கம் தெளிவிக்க வைத்தோம்.

திருமணத்தின் பின்னரும் போதநாயகியை பலமுறை தாக்கியிருக்கிறார். வெளியிடத்தில் அறைக்கு கூட்டிச் சென்று தாக்கினார். ஒருமுறை தாக்கிவிட்டு முழுநாளும் அறைக்குள் பூட்டி வைத்திருந்தார். மது போதையிலும் வந்து தாக்கினார்.
அவர் இன்னொரு திருமணம் முடித்த விசயத்தை மகள் பகிரங்கமாக எம்மிடம் சொல்லவில்லை. ஆனால் ஊரில் கதை வந்து விட்டது. போனமாதம் இதை நாங்கள் கேட்டோம். எம்முடன் கடுமையாக சண்டை பிடித்தார். பிறகு மகளை காரில் ஏற்றிக் கொண்டு அவர்களது வீட்டுக்கு கொண்டு சென்றார். அதன்பிறகு மகளை எங்கள் வீட்டிற்கு அனுப்பவேயில்லை.

வெள்ளிக்கிழமை கிளினிகிற்காக வருவதாக எனக்கு தொலைபேசியில் சொல்லியிருந்தார். வியாழக்கிழமை வருவார் என நான் சாப்பாடு எல்லாம் தயார் செய்திருந்தேன். ஆனால் அவர் சடலமாகத்தான் வீட்டிற்கு வந்தார்.

திருமணத்தின் முன்னரும் அவர் பல விடயங்களில் எம்மை ஏமாற்றி விட்டார். வங்கியில் கடன் வாங்கி கார் வாங்கி கொடுத்தார் போதநாயகி. அதைவிட பத்து இலட்சம் காசு கொடுத்திருக்கிறார். எமக்கு தெரிந்தது இது. இதைவிட இன்னும் காசு கொடுத்திருக்கிறார். இப்படியெல்லாம் செய்தும், போதநாயகியை அவர் ஏமாற்றி விட்டார்.
போதநாயகியின் இறுதிச்சடங்கிற்கும் அவர் வரவில்லை. எமது மகள் தற்கொலை செய்பவர் அல்ல. செந்தூரனால்தான் அவர் மரணமானார். அதை நான் உறுதியாக சொல்வேன். இந்த மரணத்திற்கு காரணம் செந்தூரன்தான்.

போநாயகி இறந்து விட்டார் என்றதும் செந்தூரனிற்கு எந்த பதட்டமும் இருக்கவில்லை. சடலத்தை பொறுப்பேற்க வந்தபோது, நன்றாக உடுத்திக் கொண்டு வந்திருந்தார். சடலத்தை பொறுப்பேற்கவும் இல்லை. பார்த்து விட்டு போய் விட்டார். நாங்கள்தான் சடலத்தை கொண்டு வந்தோம்.“ என்றார்.
Previous Post Next Post