தோழியை கிண்டல் செய்த இளைஞர்: சக நண்பர்களின் பகீர் வாக்குமூலம்


இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தோழியை கிண்டல் செய்த 15 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், பாட்னாவின் புறநகர் பகுதியை சேர்ந்த சத்யம்(15) என்பவர் கடந்த 27-ம் திகதி கடத்தப்பட்டார்.

அதே திகதியில் ஹோமியோபதி மருத்துவராக உள்ள மாணவனின் தந்தைக்கு போன் செய்த கடத்தல்காரர்கள் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால், பதற்றமடைந்த சிறுவனின் தந்தை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் விசாரித்து வந்த பொலிசார் அப்பகுதியில் உள்ள ஆர்.பி.எஸ் கல்லூரி வளாகத்தில் இருந்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றினர்.

இது தொடர்பாக சிறுவனின் சக நண்பர்கள் மூன்று பேரை பொலிசார் கைது செய்தனர். உயிரிழந்த சிறுவன் சத்யம், தங்களின் தோழி ஒருவர் மற்றும் அப்பகுதி பெண்கள் சிலரை கிண்டல் செய்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் கடத்தி கொலை செய்ததாக கைதான 3 சிறுவர்களும் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் சத்யம் கடந்த 27-ம் திகதி டியூஷன் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது நண்பர்கள் மூவரும் சேர்ந்து அவரை கடத்தியுள்ளனர்.

பின்னர் கல்லூரி வளாகத்தில் வைத்து சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். மயங்கியதும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்தி இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.
கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். சிறுவன் ஒருவனை மூன்று சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post