“புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நாளில் யாழ்ப்பாணம் அதிரும்“

ஒக்ரோபர் 30ம் திகதி, யாழ்ப்பாணம் “அதிரும்“ விதமான நடவடிக்கையில் ஈடுபட போவதாக வடமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் இணைப்பாளர் எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ள செய்தியாளர் ஒருவர், தன்னை மிரட்டியது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் என்.எம் அப்துல்லாஹ் என்பவரால் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் தனக்கு விடுக்கப்பட்டதாக தெரிவித்து வலம்புரி பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

“முதலமைச்சரின் சொல்லைக் கெட்டு செய்தி போடுகிறீர்கள். அடுத்த மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் அதிரும் விதமாக பெரிதாக ஒன்று இருக்கு. அதையும் செய்தியாக போட தயாராக இருங்கள்“ என்று அப்துல்லா தன்னை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தினார் என நேற்று (16) முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் அப்துல்லாவை அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் தனது முறைப்பாட்டில் கேட்டுள்ளார்.

வலம்புரிப் பத்திரிகையின் செய்தியால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அது தொடர்பில் வலம்புரிப் பத்திரிகையின் ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் அந்தப் பத்திரிகையின் பெண் செய்தியாளர் நேற்று இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

“ஒக்ரோபர் 30ம் திகதி யாழ்ப்பாணம் அதிரும் விதமாக ஒன்று இருக்கு“ என எச்சரிக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் குறித்த செய்தியாளர் அச்சம் வெளியிட்டுள்ளார். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட தினமான ஒக்ரோபர் 30ம் திகதியில், இம்முறை முஸ்லிம் வெளியேற்றத்தை பிரமாண்டமாக நினைவுகூர அஸ்மின் தரப்பு தயாராகி வருகிறது.

அன்றைய தினத்தில் தமிழ் மக்களிற்கு எதிரான ஏதாவது நடவடிக்கை இடம்பெறலாமோ என்று சஅச்சம் வெளியிட்டுள்ளார். பொலிசார் விரைந்து விசாரணை நடத்தி இதன் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அனைவரும், சமூகங்களிற்கிடையிலான நல்லிணக்கத்திற்காக உழைக்க வேண்டும், வாக்கு அரசியலுக்காக இனங்களிற்கிடையில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்ககூடாதென்பதை தமிழ்பக்கம் வலியுறுத்துகிறது.

மேற்படி செய்தி தொடர்பாக, அஸ்மின் தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post