திருமணம் முடிந்து விருந்துக்கு வந்த மணப்பெண்ணை போட்டோ எடுத்த இளைஞர்கள்! நடந்த விபரீத சம்பவம்

தமிழகத்தில் மணப் பெண்ணை படம் எடுத்தவர்களை தாய்மாமன் கண்டித்ததால், அவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே எஸ்.கல்விமடையை சேர்ந்த முருகன் மகன் செந்தில்வேலுக்கும், சென்னையை சேர்ந்த துரை மகள் ஈஸ்வரிக்கும் அங்கிருக்கும் எஸ்.கல்விமடையில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து நரிக்குடி அருகே பிள்ளையார்குளத்தில் உள்ள மணமகளின் தாய்மாமன் முருகவேல்(48), வீட்டிற்கு மணமக்கள் இரவு உணவு விருந்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார்(24), ஆறுமுகம்(24), முத்து (19), கோபி(21) உள்ளிட்ட 7 பேர் மணப் பெண், அவரது தங்கை ஆகியோரை போனில் படம் எடுத்துள்ளனர்.

இதை, கண்ட முருகவேல் ஆத்திரத்தில் அவர்களை தடுத்து கண்டித்துள்ளார்.இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கும்பல், முருகவேலை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முருகவேல், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரின் உயிர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
Previous Post Next Post