‘சரணடைந்தவர்களை புலிகளே கொன்றனர்’


இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷ், இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டாரெனத் தான் கூறியதாக, ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனவெனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, சரணடைந்த ரமேஷையும் பொதுமக்களையும், விடுதலைப் புலிகளே சுட்டுக் கொன்றனரெனவும் தெரிவித்தார்.

அத்தோடு, முன்னர் தான் கருத்துத் தெரிவித்த போது, இதுபோன்ற சம்பவங்கள், இராணுவத் தரப்பிலும் நடந்திருக்கலாம் என்றே, தான் கூறியதாகவும் தெரிவித்தார்.

புஞ்சி பொரளையில் உள்ள, சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில், நேற்று(20) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த எஸ்.பி.திஸாநாயக்க, “புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் விலகியதும், கிழக்கு மாகாணத்தின் தளபதியான ரமேஷ், பிரபாகரனால் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

இறுதியில் ரமேஷ், படையினரிடம் சரணடைந்த போது. அவர் கொலை செய்யப்பட்டார். ரமேஷ் சரணடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, தான் சரணடையப் போவதாக, எனக்கு தொலைபேசி ஊடாக அறிவித்திருந்தார்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், எஸ்.பி.திஸாநாயக்கவின் கருத்துக்கு எதிர்ப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நேற்றைய ஊடகச் சந்திப்பில், அக்கருத்துக்கு மாற்றான கருத்தையே அவர் வெளிப்படுத்தினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து, கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த கருணா அம்மான் விலகியதும், அம்மாகாணத் தளபதியாக இருந்த ரமேஷ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தார்.

எனினும் புலிகள், ரமேஷ் மீது நம்பிக்கையற்றிருந்ததால், அவரைச் சிறை வைத்தனர். இறுதி யுத்தக் காலப் பகுதியில், புலிகள் தோல்வியடையும் நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்” என்று குறிப்பிட்டார்.இதன்போதே, தொலைபேசியூடாக ரமேஷ் தனக்கு அழைப்பை ஏற்படுத்தி, தான் இராணுவத்திடம் சரணடையப் போவதாகக் கூறினார் என்று தெரிவித்த எஸ்.பி, சரணடைய முயன்ற அப்பாவிப் பொதுமக்களையும் ரமேஷையும், புலிகளே சுட்டுக் கொன்றனர் எனவும், சரணடையச் சென்ற 90 சதவீதமானவர்கள், புலிகளாலேயே கொல்லப்பட்டனர் எனவும் குறிப்பிட்டார்.

“சரணடைந்த ரமேஷ், இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டாரென, கடந்த காலங்களில் பேசப்பட்டது. ஆனால் ரமேஷ், இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டார் என நான் ஒருபோதும் சொல்லவில்லை. அது தொடர்பில் எனக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.
Previous Post Next Post