சீஸ் துண்டால் பறிபோன பிரித்தானிய சிறுவனின் உயிர்: கதறும் குடும்பத்தினர்

பிரித்தானியாவில் சீஸ் துண்டால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 13 வயது சிறுவன் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் குடும்பத்தாரை உருக்குலைய வைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் குறித்த சிறுவனை நிர்பந்தித்த சம வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு லண்டனில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த சிறுவன் 13 வயதான கரன்பீர் சீமா.

குறித்த சிறுவனுக்கு கோதுமை, சீஸ் உள்ளிட்ட பால் பொருட்கள், முட்டை உள்ளிட்ட பொருட்கள் என்றால் ஒவ்வாமை உள்ளது.

இது அவரது உறவினர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுவன் கரன், சம்பவத்தன்று சக மாணவன் ஒருவரால் சீஸ் துண்டை பயன்படுத்தி துன்புறுத்தப்பட்டுள்ளான்.

தமக்கு ஒவ்வாமை இருப்பதை சுட்டிக்காட்டிய பின்னரும், குறித்த மாணவன கரனை துரத்திச் சென்று அவனது ஆடைகளில் சீஸை வீசியுள்ளான்.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவன் பாடசாலை ஊழியர்களிடம் தமது நிலைமை குறித்து தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து பாடசாலையில் வைத்து மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது.

கடந்த யூன் 28 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தை அடுத்து பாடசாலை நிர்வாகம் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளது, அடுத்த 7 நிமிடத்தில் மருத்துவமனை அதிகாரி ஒருவர் பாடசாலைக்கு சென்று பரிசோதித்துள்ளார்.

அப்போது சிறுவன் கரன் சுயநினைவை இழந்த நிலையில் இருந்துள்ளான். மட்டுமின்றி மாரடைப்பு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.மேலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து 11 நாட்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த சிறுவன் கரன் பெற்றோர் முன்னிலையில் யூலை 9 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக 13 வயது சிறுவன் ஒருவரை லண்டன் பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் இதுவரை வழக்கேதும் பதியவில்லை எனக் கூறப்படுகிறது.


Previous Post Next Post