ஆசிரியை மீதும் பிரதி அதிபர் மீதும் சரமாரியாக தாக்குதல் : தாலிக்கொடியும் பறிப்பு!!

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை மீதும் பாடசாலையின் பிரதி அதிபர் மீதும் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஆசிரியை அணிந்திருந்த சுமார் 10 பவுண் தங்கத்தாலிக் கொடியும் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வழமை போன்று இன்று மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது பாடசாலைக்கு மிக அருகில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் இறால்குழி கஜமுகா வித்தியாலய ஆசிரியை மீதும் அப்பாடசாலையின் பிரதி அதிபர் மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்தி வெட்டுக்கும் தடியடித் தாக்குதலுக்கும் உள்ளாகிய நிலையில் படுகாயமடைந்த ஆசிரியையும் பிரதி அதிபரும் உடனடியாக மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவசர பொலிஸ் தொடர்பு இலக்கமான 119இற்கு அழைப்பு விடுத்து தகவல் சொல்லப்பட்டதன் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தடயங்களைப் பதிவு செய்துள்ளனர்.

Previous Post Next Post