
இந்திய மாநிலம் கேரளாவில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் சுகுமாரன் என்பவர் தமது கிட்னியை தானமாக வழங்கியுள்ள சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன். சொத்துத் தகராறில் சொந்த சித்தப்பாவை கொலை செய்துவிட்டு தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் 48 வயதான சுகுமாரன்.
இயற்கை ஆர்வலரான சுகுமாரன் தங்களது பரம்பரை நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க சித்தப்பா முயற்சி மேற்கொண்டதாலையே ஆத்திரத்தில் அவரை கொலை செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆர்ய மகரிஷி என்ற சாமியார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் கிட்னியை தானமாக வழங்கிய சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற சுகுமாரன், தன்னால் ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது, ஆனால் யாருக்காவது இரண்டாவது வாழ்க்கையை உருவாக்கித் தர வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளார்.
இதனிடையே முதன் முறையாக பரோலில் வெளிவந்தபோது, பாலக்காடு மருத்துவக் கல்லூரிக்கு சென்று தமது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால் சிறைக்கைதி என்ற காரணத்தால் அவரது கோரிக்கையை மருத்துவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
காரணம், சிறைக்கைதிகள் உடல் உறுப்பு தானம் செய்ய, சட்டத்தில் இடமில்லை. தொடர்ந்து நெட்டுபல்தேரி என்ற இடத்தில் உள்ள திறந்தவெளிச் சிறைக்கு மாற்றப்பட்டார் சுகுமாரன். இந்தச் சிறையில் தாங்கள் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்ய விரும்புவதாகக் கூறி, மேலும் 6 கைதிகள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்யத் தயாராக இருந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த கேரள சிறைத்துறை டி.ஐ.ஜி ஸ்ரீலேகா, கேரள முதலமைச்சரின் பார்வைக்கு சிறப்பு நோட் போட்டு அனுப்பினார்.
இதனையடுத்து கடந்த மே மாதத்தில் கேரளச் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, `சிறைக்கைதிகள் விரும்பினால், யாருக்கு வேண்டுமானாலும் உடல் உறுப்பு தானம் செய்யலாம்' என்று விதி மாற்றப்பட்டது.
இந்த நிலையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.
மிகவும் ஏழையான அந்த இளம்பெண்ணுக்கு தமது சிறுநீரகத்தை கொடுக்க சுகுமாரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக நடந்த மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு சுகுமாரனின் சிறுநீகரத்தை மருத்துவர்கள் அந்த இளம் பெண்ணுக்கு பொருத்தினார்கள்.
இச்சம்பவம் குறித்து பேசிய சுகுமாரன், அப்போது `கொலையாளி' என்றவர்கள், இப்போது என்னைக் கருணையுடன் பார்க்கிறார்கள். என் செயல், என் மீதான பார்வையை மாற்றியுள்ளது'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.