
சூட்சுமமான முறையில் மெத்தைக்குள் மறைத்துக் கடத்தப்பட்ட கஞ்சா கிளிநொச்சிப் பொலிஸாரால் நேற்றுக் கைப்பற்றப்பட்டது. அதேசமயம் முச்சக்கர வண்டி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. சந்தேகத்தில் 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சியில் உள்ள புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று நண்பகல் கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் மெத்தைகள் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை மறித்துப் பொலிஸார் சோதனையிட்டனர். மெத்தைக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு தரித்துநின்ற முச்சக்கர வண்டியில் இருந்தும் கஞ்சா கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசுவமடுப் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் கடத்திவரப்பட்ட இந்தக் கஞ்சா கிளிநொச்சியில் வைத்து மெத்தைக்குள் சூட்சுமாக மறைக்கப்பட்டன. இவை பொலன்னறுவைக்குக் கடத்தப்படவிருந்தன என்று தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் குருணாகலைச் சேர்ந்தவர் என்றும், மற்றையவர் கண்டியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு வாகனங்களில் இருந்தும் தலா இரண்டு கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.



