இலங்கை இமாலய வெற்றி: இங்கிலாந்தை 132 ஓட்டங்களில் சுருட்டி அபாரம்

தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை, இலங்கை அணி 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள், ஒரு டி20, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 4 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 3-0 என முன்னிலை வகிக்கின்றது. முதல் போட்டி மழை காரணமாக முடிவு கிடைக்கவில்லை.

5வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றுள்ளது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இலங்கையின் டிக்வெல்லா 95, சமரவிக்ரமா 54, தினேஷ் சாண்டிமல் 80, குசல் மெண்டிஸ் 56, என வரிசையாக சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவிக்க 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 366 ஓட்டங்களை இலங்கை அணி குவித்தது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 26.1 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

மழை விடாத காரணத்தால் இலங்கை அணி 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒருநாள் போட்டியின் தரவரிசையில் இங்கிலாந்து அணி நம்பர் 1 இடத்தில் உள்ளது. அதைக்காப்பாற்றிக் கொள்ளும் வகையில் சிறப்பாக விளையாடி 3-0 என ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியிருந்தது.

ஆனால் கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்று 3-1 என தொடர் முடிந்துள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக நிரோசன் டிக்வெல்லா பெற்றார். தொடர் நாயகன் விருதை இங்கிலாந்து அணித்தலைவர் இயோன் மார்கன் கைப்பற்றியுள்ளார்.








Previous Post Next Post