189 பேரை பலி வாங்கிய விமான விபத்து: இந்தோனேசியா அரசு எடுத்த அதி முக்கிய முடிவு



இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் கடலுக்குள் விழுந்து 189 பேரை பலிவாங்கிய போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் தொடர்பில் அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தலைநகர் ‌ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

இதில், 178 பயணிகள் உட்பட அனைவரும் பலியானார்கள். மீட்புக் குழுவினர் விமான பாகங்கள், பயணிகளின் உடல்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. போயிங் நிறுவனமானது கடந்த ஆண்டில் மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானங்களை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது.

விபத்துக்குள்ளான விமானமானது சேவையில் இணைந்து சில மாதங்களே கடந்துள்ளது.

இந்த நிலையில் இந்தோனேசியாவின் போக்குவரத்து அமைச்சகம் மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானங்களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து லயன் ஏர் நிர்வாகம் புதனன்று போயிங் அதிகாரிகளுடன் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியுள்ளதாகவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மேக்ஸ் 8 ரக விமானங்கள் தொடர்பில் தங்களிடம் பல கேள்விகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசியாவை பொறுத்தமட்டில் அங்குள்ள பல விமான சேவைகளும் மிக மோசமான பாதுகாப்பு சாதனைகளை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.

மேலும், ஐரோப்பிய வான்வெளியில் லயன் ஏர் விமான சேவை மேற்கொள்ள 2016 ஆம் ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டுல்ளது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post