கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இளம்தம்பதிக்கு நேர்ந்த சோகம்: அனாதையான பிஞ்சுக்குழந்தை

திண்டிவனம் அருகே நடந்த கார் விபத்தில் இளம்தம்பதியினர் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜயகுமார் (29), தொடர் விடுமுறை காரணமாக தன்னுடைய 8 மாத குழந்தைக்கு மொட்டையடிக்க தேனியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி, தன்னுடைய மனைவி சபரி(25), மகள் நானி, மாமியார் ராமலட்சுமி(45), நண்பர் ஜான்சாமுவேல்(29), அவரது மனைவி வின்சிமேரி(24) ஆகியோருடன் ஒரு காரிலும், மற்றொரு காரில் விஜயகுமாரின் நண்பர்களும் புறப்பட்டனர்.

தேனியில் மொட்டையடித்துவிட்டு, ஊட்டியில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து விட்டு, நேற்றைக்கு முன்தினம் சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது விஜயகுமார் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்த கார் திண்டிவனம் அருகே சாலையில் ஓரமாக பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.

விஜயகுமார், சபரி, ராமலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேசமயம் ஜான்சாமுவேல், வின்சிமேரி, கார் ஓட்டிவந்த அருண் மற்றும் நானி பலத்த காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post