ஏழு ஆண்டு காதல்.... காதலியை கொடூரமாக கொன்ற காதலன்: பகீர் பின்னணித் தகவல்

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் முன்னாள் காதலியை கத்தியால் தாக்கியும் பேஸ்பால் மட்டையால் தலையில் அடித்தும் கொடூரமாக கொலை செய்த இளைஞரின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 29 வயதான கென்யா நாட்டவருக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

நீண்ட ஏழு ஆண்டுகள் காதலித்த இளம் பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குறித்த இளைஞர் கொலை செய்துள்ளார்.

குறித்த இளம் பெண்ணிடம் பல முறை காதல் கோரிக்கை நடத்தியும், மொபைலில் அழைத்தும் அவர் மறுப்பு தெரிவித்த பின்னரே கொலை செய்யும் முடிவுக்கு இளைஞர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் துபாய் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறை தண்டனைக்கு பின்னர் குற்றவாளியை கென்யாவுக்கு நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தன்று இளம்பெண்ணின் அலுவலகம் செல்லும் வழியில் குறித்த இளைஞர் பேஸ்பால் மட்டையும் ஒரு கத்தியும் விலைக்கு வாங்கியுள்ளார்.

பின்னர் மாலை 5.30 மணிக்கு குறித்த இளம்பெண்ணின் அலுவலக அறையில் புகுந்து அவரது தலையில் பேஸ்பால் மட்டையால் பலமாக தாக்கியுள்ளார்.

இறப்பை உறுதி செய்யும் பொருட்டு கத்தியால் அவரது மார்பில் குத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த இளம்பெண்ணுடன் பணிபுரியும் நபர் ஒருவர் இச்சம்பவங்களை நேரில் பார்த்ததுடன், பொலிசாருக்கும் நிறுவன அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார், குற்றவாளியை அடுத்த சில தினங்களில் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டாலும், தாம் திட்டமிட்டு செய்யவில்லை எனவும், அதனால் தண்டனை காலத்தை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், ஆயுள் தண்டனையை உறுதி செய்து அறிவித்துள்ளது.
Previous Post Next Post