கோடிக்கணக்கான சொத்து! ஆனாலும் பிச்சையெடுக்க தயாராகும் இளம்பெண்கள்.. நெகிழ்ச்சி பின்னணி

தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலதிபரின் மகள்கள் 2 பேர் துறவிகளாக மாறும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர்களான கவுதம்குமார், அரவிந்த் குமார். 2 பேரும் சகோதரர்கள். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள்.

கவுதம்குமாருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் பிரெக்ஷா (26). அரவிந்த் குமாருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் ஸ்வேதா (26). பிரெக்ஷாவும், ஸ்வேதாவும் ஜெயின் மதத்தில் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள உள்ளனர்.

இது குறித்து இருவரின் தந்தையும் பேட்டியளித்தனர்.

அவர்கள் கூறுகையில், எங்கள் மகள்கள் இருவரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். பிரெக்ஷா எம்.பி.ஏ. படித்துள்ளார். ஸ்வேதா சி.ஏ. படித்துள்ளார்.

இருவரும் 22 வயது இருக்கும்போது ஜெயின் மதத்தில் துறவரம் போகப்போவதாக கூறினர். நாங்கள் அதை முதலில் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் துறவரம் செல்வதிலேயே உறுதியாக இருந்தனர்.

துறவரம் செல்வதில் கட்டுப்பாடுகள் அதிகம் என்று குடும்பத்தினர் எடுத்துக்கூறியும் அவர்கள் முடிவை மாற்றி கொள்ளவில்லை. பின்னர் நாங்கள் அவர்களின் முடிவை ஏற்றுக்கொண்டோம்.

ஜெயின் மதத்தில் துறவிகள் ஆக வேண்டும் என்றால் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

எங்கு சென்றாலும் நடந்தே செல்ல வேண்டும். பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் உணவு உண்ணக்கூடாது. 3 ஆடைகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
3 மாதத்திற்கு ஒருமுறை தங்களது தலைமுடியை தாங்களாகவே எடுத்துவிட வேண்டும். வெயிலோ, மழையோ, குளிரோ வேறு உடைகளை அணியவே கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது. இவை அனைத்தையுமே எங்களது மகள்கள் ஏற்றுக்கொண்டனர் என கூறியுள்ளனர்.

இவர்களை வழியனுப்பும் விழா திருவண்ணாமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் 26-ந் திகதி நடக்கிறது.

இதையடுத்து நவம்பர் 11-ஆம் திகதி சென்னை மாதவரத்தில் இவர்களின் குரு ஆச்சார்யா ஸ்ரீமகாஸ்ரமன் ஆசியோடு ஆன்மிக வாழ்க்கையில் இருவரும் பயணிக்க உள்ளனர்.
Previous Post Next Post