முள்ளிவாய்க்காலில் ஒரு கையை இழந்தும், புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை!

இறுதிக்கட்டப் போரின் பேரவலப் பிரதிபலிப்புகளும், தடயங்களும் அபிவிருத்தியின் போர்வையில் மறைக்கப்படலாம்.

ஆனாலும், அந்த பெருந்துயரை நேரில் கண்ட உள்ளங்கள் அதிலிருந்து மீள்வதென்பது அத்தனை இலகுவானதன்று.

இறுதிக்கட்ட யுத்தத்தில் 8 மாத குழந்தைப் பருவத்தில் கையை இழந்த ராகினி எனும் மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவியான இவர், புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பின்னால் பொதிந்துள்ள கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு அப்பால் இந்த மாணவியின் வெற்றியில் துயரும் கலந்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் தமது தாயார் கொல்லப்பட, ராகினி 8 மாத குழந்தைப் பருவத்தில் தனது இடது கையை இழக்க நேரிட்டது.

அதே எறிகணைத் தாக்குதலில் தந்தையும் காயமடைந்த நிலையில், அன்று முதல் ராகினி அப்பம்மாவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகிறார்.
வறுமையான சூழலில் பிரத்தியேக வகுப்புகள் எதற்கும் செல்லாது பாடசாலைக் கல்வியுடன் வீட்டில் செய்த மீட்டலும் இவரின் இந்தப் பெறுபேற்றுக்குக் காரணம்.

தனக்கு கற்பித்த ஆசிரியரைப் போல் தானும் பிறருக்கு கற்பிக்க விரும்புவதாக ராகினி குறிப்பிட்டார்.

முயற்சிகள் அனைத்தும் வெற்றியளித்து எதிர்காலத்தில் தான் சார்ந்த சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பு.
Previous Post Next Post