விட்டுவிடுங்கள் அப்பா... கதறிய சிறுமி: தாயாரை பழிவாங்க தந்தை செய்த கொடூரம்


பிரித்தானியாவில் முன்னாள் மனைவியை பழிவாங்கும் பொருட்டு 8 வயதேயான சொந்த மகளை தந்தையே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு மத்திய இங்கிலாந்தில் உள்ள Walsall நகரிலேயே இந்த ஆண்டு ஜனவரி மாதம் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று பிரிந்து சென்ற மனைவி Tracey Taundry தமது முன்னாள் கணவரின் குடியிருப்பில் தங்கியிருந்த 8 வயது மகளை அழைத்துச் செல்ல வந்திருந்தார்.

டிரேசியுடன் சிறுமியும் கிளம்பிய சில நொடிகளில் திடீரென்று குடியிருப்பின் உள்ளே இருந்து வெளியே வந்த வில்லியம் பில்லிங்காம், தமது மகள் மிலியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து மீண்டும் குடியிருப்புக்கு உள்ளேயே சென்றுள்ளார்.

பின்னர் சமையலறை கத்தியை எடுத்து சிறுமி மிலியின் மார்பில் குத்தி இறக்கியுள்ளார்.

சிறுமி மிலி விட்டுவிட கேட்டு கதறியும், கண்டுகொள்ளாத வில்லியம், அந்த சிறுமியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து பொலிசார் வரும்போது, சிறுமி மிலியின் உடலோடு அணைத்தபடி வில்லியம் படுத்திருந்துள்ளார். அவரது முகத்திலும் உடலிலும் ரத்தம் வழிந்தபடி இருந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் வில்லியத்திடம் இருந்து பிரிந்து சென்ற மனைவி டிரேசி இன்னொரு பெண்ணுடன் ஒருபால் உறவு வைத்துக் கொண்டது இவருக்கு ஆத்திரத்தை தந்துள்ளது என தெரியவந்துள்ளது.

இருப்பினும் அவர்களது உறவில் தமக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்றே பொலிஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

நாளை கொலை குற்றம் தொடர்பில் நீதிமன்றம் தண்டனை விபரங்களை அறிவிக்கும் என கூறப்படுகிறது.

Previous Post Next Post