காதலனை இரவில் வீட்டிற்கு வரவழைத்த காதலி: நம்பி சென்றவருக்கு ஏற்பட்ட அவஸ்தை

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இளம் பெண்ணை காதலித்த இளைஞர் ஒருவர் நள்ளிரவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பெண்ணின் தந்தை மற்றும் தாய் மாமன்கள் உட்பட 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் 17 வயது மகளை மோர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ்(27) கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் பெண்ணின் தந்தையான முத்துக்குமாருக்கு தெரிய வர மகளை கண்டித்துள்ளார். ஆனால் கண்டிப்பையும் மீறி தர்மராஜனும் குறித்த பெண்ணும் சந்தித்து வந்துள்ளனர்.

கடந்த வாரம் தர்மராஜ் தனது காதலிக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அந்த செல்போனில் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தது பெண்ணின் தந்தைக்கு தெரிந்தது.

இதன்காரணமாக ஆத்திரமடைந்த முத்துக்குமார் தனது மகளிடம் இருந்த செல்போனை பறித்து வைத்துக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தர்மராஜ் செல்போனில் அப்பெண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது முத்துக்குமார் தனது மகளிடம் தர்மராஜை நேரில் நள்ளிரவில் வந்து சந்திக்குமாறு சொல்லச் சொல்லியுள்ளார்.

அந்தப் பெண்ணும் அப்படியே கூறியுள்ளார். இதை நம்பிய தர்மராஜ் தனது காதலியை சந்திப்பதற்காக நள்ளிரவில் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு மறைந்திருந்த முத்துக்குமாரும் அவரது மைத்துனர்கள் சக்திவேல், ரமேஷ் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, ரங்க நாதன் ஆகியோர் தர்மராஜை மரக்கட்டையால் அடித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த தர்மராஜ் அங்கிருந்த காட்டிற்குள் சென்று தப்பியுள்ளார். காலையில் பார்த்தபோது தர்மராஜ் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து அவரை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

மருத்துவர்கள் பரிசோதித்தபோது தர்மராஜ் இறந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஐந்து பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

தகவலறிந்து பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 5 பேரையும் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post