
வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார். கடந்த 13ம் திகதி நாடு திரும்பி கோபாலகிருஷ்ணபிள்ளை நந்தினி என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கட்டாரில் மூன்றாண்டுகளாக பணி புரிந்த நிலையில் கடந்த 13ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.
வாழைச்சேனை சேர்ந்த நந்தினி, இலங்கை வரும் தகவலை இரு தினங்களுக்கு முன்னர் கணவனுக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் கணவனும் ஆவலுடன், விமான நிலையத்திற்கு சென்று காத்து இருந்துள்ளார்.
விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த போதும் மனைவி வரவில்லை. பின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பதில் வர கணவன் மனைவி வரவில்லை என்று எண்ணி வீடு திரும்பி உள்ளார்.
பலமுறை மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது தொடர்பு கொள்ள முடியாமையின் காரணத்தால் மனைவி பணி புரிந்த வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விசாரித்த போது அவர்கள் 13-09-2018 காலை 6.30க்கு விமான நிலையத்திற்கு அழைத்து சென்று இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக கூறினார்கள்..
இது குறித்து உடனடியாக கணவன் அருகில் உள்ள வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முற்பட்ட போது பொலிஸ் அதிகாரி கணவரை விமான நிலைய பொலிஸ் பிரிவுக்கு சென்று புகார் அளிக்குமாறு கூறினர்.
இதனையடுத்து கடந்த 15ம் திகதி விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விமான நிலைய சிசிரிவி கமரா காணொளிகளை பொலிஸார் ஆராய்ந்து பார்த்துள்ளனர்.
இதன்போது தனது மனைவி 3 பைகளுடன் விமான நிலையத்தில் நின்றதும் சிறிது நேரத்தின் பின் ஒரு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட விடயம் தெரிய வந்தது.
பின்பு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்துள்ளார் கணவர். இதனைத் தொடர்ந்து கணவன் கொழும்பு முழுவது சுற்றித்திரிந்து வீடு வந்து சேர்ந்தார்.
அதன் பின் மிகவும் மன வேதனையோடு கணவனும் இரண்டு பிள்ளைகளும் தன் மனைவியை தேடித் திரிந்தும் இதுவரை கண்டறிய முடியவில்லை.
குறித்த பெண் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரிந்தால் 0762940741 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.