
கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கோத்தகிரியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜேஷ்குமார்(வயது 32) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி லோகேஸ்வரி(25). கணவர் வெளிநாட்டில் வசித்து வந்த காரணத்தால், லோகேஸ்வரி தனது 4 வயது மகன் கார்த்திகேயனுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் லோகேஸ்வரியின் தாயார் வசந்தா, மகளின் வீட்டிற்கு வந்தார்.
அப்போது முன்பக்க கதவு பூட்டி இருந்தது. உடனே வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது, அங்குள்ள கதவு உள்புறமாக பூட்டியிருந்தது.
இதை கண்டு சந்தேகம் அடைந்த வசந்தா கோத்தகிரி பொலிசிற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பொலிசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
மேலும் அவரது மகன் கார்த்திகேயனின் கழுத்தும் அறுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தான்.
உடனே பொலிசார் அவனை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.லோகேஸ்வரியை கொலை செய்த மர்ம ஆசாமிகளை பிடிக்க எனது தலைமையிலான 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பணம் மற்றும் நகைக்காக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கவுரி சங்கர் என்பவர் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த கம்பெனியில் தயாரிக்கப்படும், மூலிகை பொருட்களை லோகேஸ்வரி வாங்கி விற்பனை செய்துள்ளார்.
இதனால், இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது, அவர் அடிக்கடி லோகேஸ்வரி வீட்டில் வந்து, தங்கி சென்றார். வேறு நபருடன் லோகேஸ்வரிக்கு தொடர்பு இருப்பதாக கூறி, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த கவுரிசங்கர், கத்திரிகோலால் லோகேஸ்வரியின் கழுத்தை அறுத்துள்ளார்.குழந்தை பக்கத்தில் இருந்த போது, அவன் கழுத்தையும் அறுத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.
அப்பகுதியில் உள்ள, சிசிடிவி கமெராவில் கவுரிசங்கர் வந்தது பதிவாகி உள்ளது. இதனையடுத்து சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் கவுரிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.