
திருச்சி மாவட்டம் முசிறியில் 10 குழந்தைகளை வீட்டிலேயே பெற்றெடுத்த பெண் 45 வது வயதில் 11 வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
கண்ணன் (47) என்பவர் கூலித்தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி சாந்தி(45). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 25 ஆண்டுகள் ஆகிறது.
இதில் 10 பிரசவங்களில் சாந்தி 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவை அனைத்திலும் சாந்திக்கு, அவர் கணவர் கண்ணனே வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார்.
இந்தநிலையில் சாந்தி 11-வது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாந்தியை முசிறி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ள செவிலியர்கள் அழைத்தனர்.
ஆனால் அவர் செல்ல மறுத்து வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாக கூறினார்.
இந்நிலையில், அவருக்கு நேற்று பிரசவலி வலி ஏற்பட்டது, வழக்கம்போல கணவர் மற்றும் பக்கத்து வீட்டு பெண்கள் உதவியுடன் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
குழந்தை பெற்ற சிறிது நேரத்திலேயே சாந்தி வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்துள்ளார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின்படி தாய், குழந்தை இருவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.