சமஷ்டி தீர்வு வழங்க முடியாது; வாக்கெடுப்பில் ரணில் வென்றால் நான் பதவி விலகுவேன்: மைத்திரி வில்லங்க முடிவு!


“வடக்கு கிழக்கு இணைப்பென்ற பேச்சிற்கே இடமில்லை. நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சமஷ்டி தீர்வை வழங்கவும் மாட்டேன்“

இப்படி திடீர் அதிரடி காட்டியுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இன்று கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி கோபாவேசமாக உரையாற்றியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவினர் செய்த துரோகத்தினாலேயே பிரதமர் பதவியில் மாற்றம் செய்தேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படும் போது, வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால் தான் ஜனாதிபதி பதவியை தொடரப் போவதில்லையென்றும் மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மேற்குலக நாடுகள் ரணில் விக்கிரமசிங்கவை மீளவும் பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபட்டு, தனக்கு தேவையற்ற அழுத்தங்களை தருவதாகவும் ஜனாதிபதி குற்றம்சாட்டியிருந்தார்.

இதேவேளை, குதிரை பேரங்கள் இன்றும் மிக தீவிரமாக நடந்துள்ளன. சுதந்திரக்கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள்- மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதில் அதிருப்தியடைந்தவர்கள்- சுயாதீனமாக இயங்க முடிவு செய்திருந்ததை நேற்று குறிப்பிட்டிருந்தோம்.

அவர்களை வளைத்துப் போடும் முயற்சியில் பசில் ராஜபக்ச இறங்கியுள்ளார். அதிருப்தியணியின் முக்கியஸ்தரான துமிந்த திஸாநாயக்கவுடன் இன்று பசில் ராஜபக்ச சுமார் இரண்டு மணி நேரம் சமரச பேச்சில் ஈடுபட்டிருந்தார்.

எனினும், அதிருப்தியணியில் உள்ள பியசேன கமகே, மனுஷ நாணயக்கார, இந்திக்க பண்டாரநாயக்க, ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட சுமார் ஏழுவரையான உறுப்பினர்கள் ஐ.தே.கவில் இணையும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.
Previous Post Next Post