
தமிழகத்தில் காதலியை மகிழ்விப்பதற்காக நகைக்கடையையே காதலன் கொள்ளையடித்துச் சென்றதால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் டவுனில் காவல்நிலையத்திற்கு அருகில் இருக்கும் மதுரா நகைகடையில் நகைகள் மற்றும் அங்கிருந்த ரொக்கபணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனால் இது தொடர்பாக பொலிசார் இரண்டு தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். அதுமட்டுமின்றி அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபரையும் தேடி வந்தனர்.
அவரது வண்டி எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வண்ணான் பச்சேரியை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கணேசன், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மாரிமுத்தாள் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
மாரிமுத்தாள் தனக்கு தங்க நகை வாங்கித்தரும்படி கணேசனிடம் அடிக்கடி கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார். எப்போதும் வீடுகளில் கைவரிசை காட்டும் கணேசன் காதலியை மகிழ்விப்பதற்காக நகைக்கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த
ஏராளமான நகைகள், 1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப்பணத்தை எடுத்து கொண்டு, அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அதன் பின் கொள்ளையடித்த நகைகளை காதலிக்கு போட்டு அழகு பார்த்த கொள்ளையன் கணேசன், அதனை அடமானம் வைத்து பணமாக்க கேட்டுக் கொண்டுள்ளான்.
அதன் படி நிதி நிறுவனம் மற்றும் வங்கி ஒன்றிலும் குறிப்பிட்ட அளவு திருட்டு நகைகளை அடகு வைத்து பணமாக்கிய மாரிமுத்தாள் மீதம் உள்ள நகைகளை அவ்வப்போது அணிந்து மகிழ்ந்து வந்துள்ளார்.
கணேசன் கொடுத்த தகவலின் பேரில் மாரிமுத்தாள் கைது செய்யப்பட்டார், நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகை மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள திருட்டு நகைகளை மீட்டதாகவும் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.