இப்படியொரு திருமணமா? மணமகள் கையில் சூடுவைத்து நடக்கும் பதைபதைக்கும் சடங்கு... சுவாரசிய பின்னணி


மணமகள் கையில் சூடுவைத்து மணமகனை கரம் பிடிக்கும் தோடர் இன மக்களின் ஆதிகாலத் திருமணங்கள் தற்போதும் அரங்கேறி வருகின்றன.

பிரமாண்ட மண்டபத்தில் நடன குழுவினர் புடை சூழ வண்ண ஆடைகளுடன் சினிமா பாடலுக்கு நடனமாடி மாப்பிள்ளை அழைப்பு என நடக்கிறது நகர்ப்புறத்து ஆடம்பர திருமணங்கள்.

இந்த உற்சாகத்துக்கு சற்றும் குறைவில்லாமல் பாரம்பரிய முறைப்படி, வனமும் வனம் சார்ந்த பகுதியில் வைத்து ஆதிகாலத்து வழக்கப்படி அரங்கேறியது, நீலகிரிமாவட்டம் தாரநாடு மந்து பகுதியில் உள்ள பழக்குடியின மக்களான தோடர்கள் வீட்டு திருமண விழா.திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகளின் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்லும் மணமகன் அங்குள்ள பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார். தலையில் கால் வைத்து மணமகனையும், மணமகளையும் ஆசீர்வதிக்கின்றனர்.

வீட்டில் இருந்து மூங்கில் களியில் கொண்டுவரப்பட்ட பாலை மணமகளுக்கு கொடுக்க, அதனை இலையில் பெற்று பருகும் சடங்கும், அதனை தொடர்ந்து மண் பானையில் பொங்கல் வைத்து அதனை இலையை கொண்டு எடுத்து பெரியோர்களை நினைவு கூறும் வகையில் கம்பளி கட்டப்பட்ட கம்பிற்கு முன்னால் படையல் வைத்து வணங்கும் சடங்கும் நடத்தப்படுகின்றதுபுகுந்த வீட்டிற்கு செல்லும்போது எத்தகைய துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மன உறுதி இருப்பதை காட்டும் வகையில், கையில் கொடுக்கப்பட்ட விளக்குத் திரிகளை தீயில் எரித்து மணப்பெண் தனது கையில் சூடு வைத்துக் கொள்ளும் சடங்கு சற்று பதைபதைப்பை ஏற்படுத்தினாலும் திருமண பந்தத்தின் சிறப்பை புதுப்பெண்ணுக்கு புரியவைக்கிறது.


இரவு நடக்கும் சடங்குகளை தொடர்ந்து, காலையில் திருமணம் களைகட்ட தொடங்குகிறது. காட்டிற்குள் இருந்து செடிகொடிகளைக் கொண்டு வில்- அம்பு செய்து பாரம்பரிய இசையுடன் மணமகன் எடுத்து வருகிறார்.

அந்த வில்- அம்பை மணமகளிடம் கொடுக்க, அவர் அதனை பெற்று நகா மரத்தின் அடியில் வைத்து வணங்குகிறார்.

நகா மரத்தில் துளையிட்டு வைக்கப்பட்ட விளக்கு தீபத்தை உற்றுநோக்கியபடி இருக்கும் மணமகளுக்கு கண்ணீர் வந்ததும், அவர் முன் மணமகன் வந்து நிற்கிறார். இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்கின்றனர்.அதனை தொடர்ந்து மணமகள் மற்றும் மணமகனின் சொந்தங்களும் பந்தங்களும் ஒன்றிணைந்து பாரம்பரிய நடனம் ஆடி உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
Previous Post Next Post