
கனடாவில் இரயில் நிலையம் அருகே பிணமாக கிடந்த இளம்பெண் அரசு குழந்தைகள் மற்றும் குடும்ப நல அமைப்பின் கண்காணிப்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
கனடாவின் Pas பகுதியைச் சேர்ந்த Darcie (15), Winnipegஇலிருந்து 521 கிலோமீற்றர் தொலைவில் பிணமாக கிடந்ததைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.
போதைப்பொருள் மற்றும் மதுபானத்திற்கு அடிமையான Darcie அதனால் மிகவும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு நாள் அவளது சகோதரன் இறந்துபோக, அவளது நிலைமை இன்னும் மோசமானது.
தன்னுடைய தாயின் வீட்டில் தங்கியிருந்த அவளை, அவளது தாயால் சமாளிக்க முடியாமல் போனது.
எனவே அவளது தந்தையான Emil Nabess, அவளைத் தன்னுடன் வைத்துக் கொண்டால், அவளை பழைய நிலைமைக்கு மீட்டுக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தார்.
ஆனால் அவளால் அவளது மனப் போராட்டங்களிலிருந்து மீள இயலவில்லை. ஒரு வீட்டுக்கு அடங்காத சிறுமியைப் போல தான் ஆசைப்பட்டதையெல்லாம் செய்ய வேண்டும் என விரும்பி அவ்வப்போது வீட்டை விட்டு ஓட ஆரம்பித்தாள்.
அதனால் தனக்கு எந்த பிரச்சினையும் வராது என்றே அவள் எண்ணிக் கொண்டிருந்தாள். கடைசியாக அவளை அரசின் குழந்தைகள் மற்றும் குடும்ப நல அமைப்பின் கண்காணிப்பில் விட்டார் அவளது தந்தை.
அவர்களாவது அவளுக்கு உதவ முடியும் என்று நம்பினார் அவர். ஆனாலும் அவளது பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படவில்லை. ஒவ்வொரு காப்பகமாக மாற்றப்பட்டாள் அவள்.
இந்நிலையில் இரயில் நிலையம் ஒன்றின் அருகே அவளது உயிரற்ற உடல் கிடைத்த நிலையில், கடைசி வரை அவளுக்கு தேவைப்பட்ட உதவியை யாராலும் அவளுக்கு கொடுக்க முடியவில்லை என்கிறார் அவளது தந்தை.
Darcieயின் மரணத்திற்கு என்ன காரணம் என்றோ அல்லது அவள் எப்போது உயிரிழந்தாள் என்றோ பொலிசார் இதுவரையில் தெரிவிக்கவில்லை.
ஆனால் கொலை வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.