மூன்றாவது மனைவி மீதுள்ள ஆசையால் கணவர் எடுத்த முடிவு: ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி செய்த செயல்

இந்தியாவில் கணவரின் மூன்றாவது மனைவியை, இரண்டாவது மனைவி கொலை செய்துவிட்டு சடலத்தை போர்வையில் மறைத்து தூக்கி போட்ட நிலையில் சிசிடிவி கமெரா மூலம் சிக்கியுள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் சுஷில் மிஸ்ரா (45). இவர் முதல் திருமணம் செய்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017-ல் பார்வதி மேனி (33) என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் மிஸ்ரா.

இதையடுத்து தனி வீட்டில் தனது மகள்கள் மற்றும் பார்வதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு யோகிதா என்ற பெண்ணை மிஸ்ரா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.இதன்பின்னர் யோகிதாவுடன் தனிவீட்டில் வசிக்க முடிவு செய்த மிஸ்ரா மற்றவர்களை விட்டு அவருடன் தனியாக சென்று வசிக்க தொடங்கினார்.

மேலும் இரண்டாம் மனைவி பார்வதியை வந்து சந்திப்பதையும், அவருக்கு செலவுக்கு பணம் கொடுப்பதையும் மிஸ்ரா நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து யோகிதா, மிஸ்ரா வாழ்க்கையில் வந்த பின்னரே தனக்கு இந்த கதி நேர்ந்தது என புலம்பிய பார்வதி, மிஸ்ராவின் இரண்டு மகள்களுடன், மிஸ்ரா இல்லாத நேரம் பார்த்து அவர் வீட்டுக்கு சென்றார்.

அவர்களுடன் இன்னொரு ஆணும் உடன் சென்றார்.

பின்னர் நால்வரும் சேர்ந்து, மிஸ்ராவின் மூன்றாவது மனைவி யோகிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்கள்.

பின்னர் அவர் சடலத்தை போர்வையில் மறைத்து வைத்து ஆட்டோவில் எடுத்து சென்று அங்குள்ள ஒரு ஷாப்பிங் மாலில் தூக்கி போட்டுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த 28ஆம் திகதி நடந்த நிலையில் மார்ச் 1ஆம் திகதி மாலில் சடலம் இருப்பதை கண்ட சிலர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அங்கிருந்த சிசிடிவி கமெராவை ஆய்வு செய்ததில் சிலர் ஆட்டோவில் சடலத்தை கொண்டு வந்தது தெரிந்தது.இதையடுத்து 4000-க்கும் அதிகமான ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரித்த பொலிசார் இறுதியாக யோகிதா சடலத்தை கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்தனர்.

அவர் பார்வதி குறித்த தகவலை கூறிய நிலையில் பார்வதி உட்பட 4 பேரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Previous Post Next Post