எனது கடைசி ஆசை இதுதான்: கடிதம் எழுதி வைத்து காவலர் எடுத்த அதிர்ச்சி முடிவு

தமிழகத்தின் சென்னையில் நீதிபதியின் வீட்டில் பாதுகாப்பு பணிக்கு நின்றிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், மரணத்திற்கு பின் எரித்தாலோ, புதைத்தாலோ காக்கி உடையை கழற்றக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது.



இப்பகுதியில் குடியிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் சமீபத்தில் மணிப்பூருக்கு மாறுதலாகி சென்றுள்ளார்.

ஆனால் அவரது குடியிருப்பு இங்கு உள்ளது. அவரது வீட்டின் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படையை சேர்ந்த காவலர் சரவணன் ஈடுபட்டிருந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் சென்னை ஆயுதப்படை காவலராக பணியாற்றுகிறார். நேற்று காலையில் இருந்தே சரவணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், மாலையில் நீதிபதி வீட்டிலேயே இருக்கும் காவலர்களுக்கான அறைக்கு சென்ற சரவணன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து நெற்றியில் சுட்டுக் கொண்டார்.

துப்பாக்கிச் வெடித்தச் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது, சரவணன் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடியப்படி கிடந்தார்.

உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சரவணன் சுயநினைவை இழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். சரவணன் தற்கொலை முயற்சி குறித்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது சரவணன் எழுதிய ஒரு கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அதில், எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. எனது அம்மா, அப்பாவை நல்லப்படியா பார்த்துக்கொள்ளுங்கள்.

என்னை புதைத்தாலோ அல்லது எரித்தாலோ எனது காக்கி கழற்றாதீர்கள், இது எனது கடைசி ஆசை. அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள் என எழுதியுள்ளார்.

காவலர் பணியை இந்த அளவுக்கு நேசிக்கும் நபர் எதனால் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post