230 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை! மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நேற்றைய தினம் நடத்தப்பட்ட கொடூரமான குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 230 ஐ தாண்டியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் கதாயமடைந்த நிலையில் 470 க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிசார், இவர்களில் பலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பத்து பேர் குற்றப்புலனாய்வு பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர்.

தலைநகர் கொழும்பின் கொச்சிக்கடை பகுதியிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பிலுள்ள புனித சீயோன் தேவாலயங்களில் நேற்றைய தினம் காலை உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு இடம்பெற்ற விசேட ஆராதனைகளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் குண்டுத் தாக்கதல்கள் இடம்பெற்றுள்ளன.

முதலில் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்தத் தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.எவ்வாறாயினும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் தற்கொலைத் தாக்குதல்தான் என்று குறித்த சம்பவத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பியவர்கள் ஆரம்பத்திலேயே உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், நீர்கொழும்பு புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் கொச்சிகடை அந்தோனியார் தேவாலயங்களில் இருந்து மூன்று தலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தலைகள் குறித்த தேவாலயங்களில் தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலை தாரிகளுடையதாக இருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களையும், கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த ஆறு தாக்குதல்களும் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8.45 முதல் 9.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

கத்தோலிக்கர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த ஏராளமான கத்தோலிக்கர்களை இலக்கு வைத்தே திட்டமிட்ட இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

நீர்கொழும்பு கட்டுவபிட்டிய சாந்த செபஸ்தியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலியானோர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வைத்தியசாலையில் காயமடைந்த மற்றும் மரணித்தவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடி உள்ளதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

இராணுவத்தினர், விமானப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து வைத்தியசாலையில் பாதுகாப்பு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் மூன்றாம் நான்காம் ஐந்தாம் 19 ஆம் 20 ஆம் இலக்க விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து வெளிநாட்டவர்கள் அதிகமாக நடமாடும் இடங்களாக இருக்கும் கொழும்பிலுள்ள முக்கிய நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 1.45 அளவில் தெஹிவனை பகுதியிலுள்ள மிருகக் காட்சிசாலைக்கு அண்மித்த விடுதியொன்றில் குண்டொன்று வெடித்துள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களில் கொழும்பு தெமட்டகொட பகுதியில் இரண்டு குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் தற்கொலைத் தாக்குதல் ஒன்றும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பலியானதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதேவேளை நேற்றைய தாக்குதல்களில் காயமடைந்த 470 க்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், நீர்கொழும்பு, ராகம மற்றும் மட்டக்களப்பு ஆகிய வைத்தியசாலைகளிலும் சிகிச்சைப்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இதுவரை இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்பிலும் அல்லது அதற்கான பின்னணி தொடர்பிலோ இதுவரை எந்தவிததத் தகவல்களும் தெரியாததால், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா அரச தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை வட மாகாண உள்ளிட்ட நாளாவிய ரீதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள், கோவில்கள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post