பொள்ளாச்சி பாலியல் விவகாரம்... சிபிஐ விசாரணையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல்..!

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூர சம்பவங்கள், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, விவரம் வெளியுலகிற்கு தெரியவந்தது.

இதுதொடர்பாக திருநாவுக்கரசு(26), சதீஷ்(29), சபரிராஜன்(25), வசந்தகுமார்(24), மணிவண்ணன்(28) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஏராளமான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாறி, தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி ஆதாரங்கள் திரட்டப்பட்டன.

இந்நிலையில் வழக்கின் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை, கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் நேற்று முன் தினம் தாக்கல் செய்தனர். அதன்படி, குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணை
இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படும் பெண்கள் ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதனை பயன்படுத்தி மிரட்டி, பல்வேறு அதிர்ச்சிகர சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கைதான 5 பேர் தான் காரணம் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்தக் குற்றத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்று சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
Previous Post Next Post