ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டாரா? மாயமான கேரள இளம்பெண் தொடர்பில் வெளியாகும் பகீர் பின்னணி

இந்திய மாநிலம் கேரளாவில் இருந்து மாயமான இளம்பெண் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக எழுந்த புகாருக்கு அவரே தற்போது விளக்கமளித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 19 வயதான சியானி பென்னி என்பவர் கடந்த 18 ஆம் திகதி கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாததால் பதற்றமடைந்த சியானியின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்தனர்.அதில் தங்களது மகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு, சியானி காணாமால் போனதாக கருதப்பட்ட நாளன்று பிற்பகல் விமானம் மூலம் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனரா? என்ற புகாருக்கு சியானி பென்னி பதிலளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அபுதாபியில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பதிலளித்த அவர்,

என்னை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்தி வந்துள்ளனர் என்பது முற்றிலும் தவறான செய்தி. அபுதாபியில் வசிக்கும் இந்தியர் ஒருவருடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் எனக்கு சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
நான் அவரை திருமணம் செய்து கொண்டு அபுதாபியிலேயே வாழ விரும்பினேன். அதனால் கேரளாவில் இருந்து விமானம் மூலம் அபுதாபிக்கு வந்துள்ளேன் என்றார்.

மேலும், எனது விருப்பத்தின்படி கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாமிற்கு மதம் மாறி விட்டேன் எனவும் இதை கடந்த 24 ஆம் திகதி அபுதாபி நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்திருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மட்டுமின்றி என்னை மதம்மாற யாரும் வற்புறுத்தவில்லை, எனது சொந்த விருப்பத்தினாலேயே இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன்.

மேலும், எனது பெற்றோர் என்னை அழைத்து செல்வதற்காக அபுதாபிக்கு வந்தனர். இந்தியாவிற்கு வர விருப்பமில்லை என அவர்களிடம் திட்டவட்டமாக கூறிவிட்டேன் எனவும் அந்த ஊடகத்திற்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post