மகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி... மறுநாள் சடலமாக மீட்பு

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (35) என்பவர் அப்பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சோபனா (29) என்கிற மனைவியும், தேவா (11), சச்சின் (4) என இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 19ம் திகதியன்று வேலைக்கு சென்ற சோபனா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன கணவர் அக்கம்பக்கத்தில் மனைவியை தேடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.

அப்போது கணவருக்கு போன் செய்த சோபனா, தனது மகன் தேவாவின் பிறந்த நாளுக்காக துணி வாங்கிக் கொண்டு வருவதாகவும், ஊருக்கு வரும் கடைசி பஸ்சை விட்டு விட்டதால் தனக்கு தெரிந்த நண்பரின் காரில் வீட்டிற்கு வருவதாகவும் இரவு 9 மணிக்கு தகவல் கொடுத்துள்ளார்.ஆனால் நள்ளிரவை தாண்டியும் கூட அவர் வீடு வந்து சேராததால் சந்தேகமடைந்த செந்தில், உடனடியாக பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸாரும் விசாரணை மேற்கொண்ட சமயத்தில், திருச்செங்கோடு பகுதியில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சோபனா சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிஸார், அங்கிருந்த தடயங்களை வைத்து நகைக்காக கொலை செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் அவருடைய ஆடைகள் கிழிந்தும், கொண்டு வந்த பொருட்கள் சிதறியும் கிடந்ததால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

இதற்கிடையில் சோபனாவின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்த போது, கணேஷ்குமார் (35) என்பவருடன் கடைசியாக பேசியிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்த அவரிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post