கல்யாணம் செய்து வைக்க சொல்லி தகராறு… மகனை அடித்துக்கொன்ற விவசாயி..!

பொம்மிடி அருகே திருமணம் செய்து வைக்க கூறி தகராறில் ஈடுபட்ட மகனை, தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள மங்களம் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்ன பையன் (வயது 62), விவசாயி. இவருடைய மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். இவர்களில் இளைய மகன் கார்த்திக் திருமணம் ஆகி கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மூத்த மகன் வெங்கடேசனுக்கு (31) திருமணம் ஆகாத நிலையில், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் கூட அதியமான் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறும், தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்குமாறும் கூறி தகராறில் ஈடுபட்டார்.இந்த தகராறு முற்றவே, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சின்ன பையன் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து வெங்கடேசனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன பையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்ற மகனை தந்தையே அடித்துக்கொன்ற பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Previous Post Next Post