லண்டனில் உயர் ரக ஈவியன் குடிநீரை தண்ணீர் தொட்டியில் நிரப்பிய அமீரக கோடீஸ்வரர்

லண்டனில் உள்ள 60 மில்லியன் பவுண்டுகள் பெறுமதி கொண்ட மாளிகையின் தண்ணீர் தொட்டியில் அமீரக கோடீஸ்வரர் ஒருவர் ஈவியன் குடிநீரை நிரப்பிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



அமீரக கோடீஸ்வரர்களில் ஒருவரும் ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியுமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் என்பவரே தண்ணீர் தொட்டியில் உயர் ரக ஈவியன் குடிநீரை நிரப்பியவர்.

இதற்காக ஈவியன் குடிநீர் போத்தல்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கப்பலில் வரவழைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈவியன் குடிநீர் லிற்றருக்கு 600 ரூபாய் வரை விலைக்கு விற்கப்படுவது நினைவு கூரத்தக்கது.

தற்போது 71 வயதாகும் ஷேக் கலிஃபா, லண்டனில் உள்ள அந்த 18 ஆம் நூற்றாண்டு மாளிகையில் ஆண்டுக்கு எப்போதாவது ஒரு சில நாட்கள் மட்டுமே தங்கிச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.



லண்டனில் இவருக்கு சுமார் 5.5 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவரது ஒன்றுவிட்ட ஒரு சகோதரரே மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளர்.

மேலும் ஷேக் கலீஃபா அல்லது அவரது குடும்பத்தினர் எவரும் 17 ஆண்டுகளாக வருகை தராத, மாட்ரிட்டுக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு மாளிகையின் பாதுகாப்புக்கு என 15 நிரந்தர ஊழியர்களுக்காக ஆண்டுக்கு 450,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக செலவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.

ஷேக் கலிஃபாவின் தந்தையே ஐக்கிய அமீரகத்தை நிறுவியவர் என்பதால், 2004-ல் அவர் மறைவுக்கு பின்னர் இவர் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.



மட்டுமின்றி Abu Dhabi Investment Authority என்ற நிறுவனத்தின் தலைவராகவு ஷேக் கலிஃபா செயல்பட்டு வருகிறார்.

இந்த நிறுவனத்தின் மொத்த சொத்துமதிப்பு 875 பில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் உயரிய விருதுகளில் ஒன்றை மகாராணியாரால் ஷேக் கலீஃபா பெற்றுக்கொண்டார்.

அதேவேளை ஐக்கிய அமீரகத்தின் உயரிய விருதான Order of Zayed பிரித்தானிய ராணியாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post